தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாடநூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4.5.2018 தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) த.உதயசந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேசியக் கலைத்திட்டம் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவர்கள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளதோடு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாகத் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் அளிக்கிறது. இப்புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் என்பது உறுதி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில், ''குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள், மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல், அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள், தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள், கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி, கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை 'கியூஆர் கோடு' மூலம் அணுகும் வசதி, கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல், பாடப் பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி, சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து, பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல், பன்முக தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு, தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல், மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி, முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை'' என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன
சிறப்பு
ReplyDelete