Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசிரியர்!



“ஏன் மிஸ், நம்ம நாட்டுல 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறதா ஒரு நியூஸ் படிச்சேன். உண்மையா மிஸ்?”
“ஆமாம். யுனெஸ்கோ ரிப்போர்ட் அப்படித்தான் சொல்லுது. எதுக்குத் திடீர்னு இந்தத் தகவலைக் கேக்கற?”
“நம்ம ஸ்கூல்ல ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களாவது இருக்காங்களே மிஸ். வேற சில ஸ்கூல்ல அம்பது, அறுபது பசங்க கூட இருக்காங்க. இது என்ன கணக்கு?”
“இது சராசரி விகிதத்தைச் சொல்லுது. நம்ம நாட்டுல படிக்கற மொத்த மாணவர்கள், அவங்களுக்குச் சொல்லித்தர மொத்த ஆசிரியர்கள் ஆகியோருடைய எண்ணிக்கையை எடுத்துக்கிட்டு, இப்படி ஒரு விகிதத்தைச் சொல்றாங்க. ஆனால், எல்லா நாட்டுலேயும் இப்படித்தான் இருக்குது.”
“அப்படியா?”
“சர்வதேச சராசரியே 23.4 : 1ங்கிற அளவுலதான் இருக்கு. இந்த விகிதத்துல முன்னணியில இருக்கிறது சீனா. அங்கே 16.3 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்காங்க. பாகிஸ்தான்ல நிலைமையே வேற. அங்கே 46.3 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்தான் இருக்கிறதா யுனெஸ்கோ சொல்லுது.”
“ரொம்ப கஷ்டம் இல்ல மிஸ். பசங்களாலேயும் படிக்க முடியாது. எல்லோருக்கும் உங்களாலயும் சொல்லிக் கொடுக்கவும் முடியாது.”
உமா மிஸ் சிரித்தார். அவரது அணுகுமுறையே வேறு. ஒவ்வொரு மாணவரிடமும் வந்து, அவர் புரிந்துகொண்டாரா என்பதைப் பார்த்து பார்த்துச் சொல்லிக்கொடுப்பவர். வகுப்பறைக்கு வெளியேயும் அவரிடம் போய் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எல்லா டீச்சர்களும் உமா மிஸ் மாதிரியே இருப்பார்களா என்ன?
“கஷ்டம்தான். ஆனால், இன்னிக்கு இதுக்கெல்லாம் டெக்னாலஜி புதிய தீர்வுகளைக் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு. ஏற்கெனவே கம்பியூட்டர் வழியா கத்துக்கறது, ரோபோ சொல்லித்தருவது எல்லாம் புழக்கத்துக்கு வந்துடுச்சு. ஆனால், சமீபத்துல நடந்துக்கிட்டு வருகிற சில சோதனை முயற்சிங்க இன்னும் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகுது…”
“அது என்ன மிஸ்?”
“வழக்கம்போல இதுலேயும் முன்னோடி நம்மோட ஃபின்லாந்துதான். அங்கே 'எலியாஸ்'ங்கற புது ரோபோவை பள்ளிகளில் பயன்படுத்தறாங்க. இந்த ரோபோவால 23 மொழிகளைப் புரிஞ்சுக்க முடியும், பேச முடியும். இதனை வெச்சுக்கிட்டு மாணவர்களுக்கு மொழிப் பயிற்சி கொடுக்கறாங்க. ஒவ்வொரு மாணவரோட மொழித் திறனை ஒட்டி, அவரிடம் கேள்வி கேட்பது, பேசுவது, புரிந்துகொள்வது ஆகிய விஷயங்களை, இந்த ஓர் அடி உயரமுள்ள எலியாஸ் செய்யுது. அப்புறம், வகுப்பு ஆசிரியர்கிட்ட, மாணவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பதையும் சொல்லுது. இதேபோல், கணிதம் சொல்லிக்கொடுக்க 'ஓவோபாட்'ங்கற (OVObot) ரோபோவைப் பயன்படுத்தறாங்க. எலியாஸ் இப்போதைக்கு ஆங்கிலம், ஃபின்லாந்து மொழியான ஃபின்னிஷ், ஜெர்மனி ஆகிய மொழிகளை மட்டும் சொல்லிக் கொடுக்குது…இந்தச் சோதனை வெற்றியடைஞ்சா, இதே மாதிரியான டெக்னோ டீச்சர்களை ஃபின்லாந்துல அறிமுகப்படுத்த திட்டம் வெச்சிருக்காங்க.”
“இயந்திர ஆசிரியர்களா?”
“ஆமாம். இதுல பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கிட்டு இருக்கு. மடிக்கணினி, செல்போன், கால்குலேட்டர் மாதிரி இனிமேல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனி இயந்திர ஆசிரியர் கூடவே இருப்பார். அவர், உங்களோட பாட்டுப் பாடலாம், டான்ஸ் ஆடலாம், உங்களுக்குப் பிடிச்ச பாடங்களை நீங்க படிக்கிற வேகத்துக்கு ஏற்ப, நீங்க புரிஞ்சுக்கறா மாதிரி சொல்லிக் கொடுக்கலாம்.”
“அப்போ, இனிமேல் 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கதையெல்லாம் இருக்காதா?”
“ஆமாம். இதைத்தான் பிரத்யேகமான ஆசிரியர்னு சொல்றாங்க. இந்த இயந்திர ஆசிரியர் உங்களுடைய அன்புக்குரியவராக, பக்கத்துலேயே இருப்பார். பல மாணவர்களுக்கு இயந்திர ஆசிரியர்கள் ரொம்பவும் பிடிச்சுப் போயிட்டாங்க. அவங்களை ஒரு இயந்திரமாகவே யாரும் பார்க்கறதில்ல… தோழனா, அணுக்கமான நண்பனாக பார்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.”
“ஓ! இந்த ஆசிரியர் கோச்சுக்க மாட்டார், அடிக்க மாட்டார்…”
“எந்த ஆசிரியர் இப்போ அடிக்கறாங்க? அதெல்லாம் பழைய காலம். இது அதுக்கும் மேல… நார்வேயில இன்னொரு ரோபோ, இன்னொரு சூப்பரான வேலையைச் செய்யுது.”
“என்ன செய்யுது மிஸ்?”
“உங்கள மாதிரி ஸ்டூடென்டாவே மாறிடுது. உங்களுக்கு ஜூரம், ஸ்கூலுக்குப் போக முடியலன்னு வெச்சுக்குங்க. இந்த ரோபோவை வகுப்புக்கு அனுப்பிவைக்கலாம். அது வகுப்புல போய் உட்கார்ந்துக்கிட்டு, டீச்சர் சொல்றதையெல்லாம் பார்க்கும், கேட்கும். அது அப்படியே 'லைவ்வாக' வீட்டில் இருக்கும் உங்களுக்கு தெரியும். நீங்க வகுப்பையும் மிஸ் பண்ணவேண்டாம், பாடங்களையும் மிஸ் பண்ணவேண்டாம். உங்களுடைய கண்ணாகவும் காதாகவும் ரோபோ செயல்படும்.”
“அப்ப இனிமே டீச்சரே தேவைப்பட மாட்டாங்களா மிஸ்?”
“நிச்சயம் இல்ல. எலியாஸோ, வேற ரோபோவோ நிச்சயம் டீச்சரோட இடத்தை நிரப்பாது. ஆனால், மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில, பிரத்யேகமா சொல்லிக் கொடுப்பதற்குப் பயன்படும். எலியாஸோட மூளையாக ஒரு டீச்சர் தான் இருந்தாகணும். நானே 35 உமாவாக மாற முடியாது இல்லையா? எனக்குப் பதிலா 35 எலியாஸ்கள் வந்து, வகுப்புல இருக்கிற 35 மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் பெரிய முன்னேற்றம். நீங்க ஒவ்வொருவரும் நான் சொல்லிக்கொடுக்கறதை முழுமையாக புரிஞ்சுக்கிட்டீங்களான்னு எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். இனிமே அந்தக் கவலை இல்லை. என் சார்பாக, எலியாஸ் உங்களுக்குப் பயிற்சி கொடுத்து, புரியவெச்சுடும்.”




1 Comments:

  1. Dear admin sir
    Teacher edamaruthal counselling eipothu solunga please

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive