பொள்ளாச்சி:''மழைக்காலத்தில்,
பள்ளி வளாகத்தில்,
மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழை காலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை பெய்து வரும் சூழலில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
 கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாக அப்பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) வெள்ளிங்கிரி
கூறியதாவது:பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்த நிலை கிணறுகள், நீர் நிலைத்தொட்டிகள், திறந்த கழிவுநீர் தொட்டிகள் மற்றும் இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அந்த கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்லாமல் தடுப்பு அமைத்து, அங்கு செல்ல தடை விதித்துள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில், ஆபத்தான நிலையில், அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகளை உடனடியாக அகற்ற மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் பசுமையான மரங்கள் நடப்பட வேண்டும். பள்ளிகளில், முதலுதவி பெட்டி மற்றும் தேவையான மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது மருந்து பொருட்களை புதுப்பிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போதும், பள்ளி வளாகத்துக்குள்ளும் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்தல் அவசியமாகும்.
பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல், வெளியேற்றி, சுகாதாரத்துடன் பள்ளி வளாகம் இருப்பதுடன், கொசு உற்பத்தி ஆகாமல் கட்டுப்படுத்த கண்காணிப்பு செய்ய வேண்டும். பயன்பாடில்லாத பொருட்கள், டயர்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'தொங்கல்' பயணம் கூடாது!
பஸ்களில் ஆபத்தான தொங்கல் பயணத்தை தவிர்க்க, காலை நேர கூட்டங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதிகளில், தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவதுடன், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments