தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற மனநிலையே 90 சதவீதம் பெற்றோரிடம் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை தெரிவித்தது. தரமான கல்வி, தனியார் பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும் என்ற எண்ண ஓட்டமே இதற்கு காரணம். இப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கற்றலில் பல்வேறு புதுமைகளை கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது.
இதற்கு முன்னோடியாக புதிய விடியலுக்கு வித்திட்டுள்ளது சேலம் மாவட்டத்தின் குரால்நத்தம் குக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. முத்தானூர், குரங்குபுளியமரம், ஜல்லூத்துப்பட்டி, சூரியூர் என்று சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 123 மாணவர்கள், இங்கு படிக்கின்றனர். ஸ்மார்ட் சீருடையில் தனியார் வேன்களில் அசத்தலாக பள்ளிக்கு வரும் மாணவர்கள், புரொஜெக்டர் மூலம் காட்சியாக தங்கள் பாடங்களை கற்கின்றனர்.
உயிர், மெய் எழுத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கு இசை வடிவில் கற்பிக்கப்படுகிறது. கையெழுத்து தான் நமது தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, ‘என் கடமை’ என்ற தலைப்பில் சிறந்த வாசகங்களை எழுத வைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதே போல் மூலிகைத் தோட்டம், எழுத்து தோட்டம், வார்த்தை தோட்டம், வாக்கியத் தோட்டம், ஸ்மார்ட் போர்டு, கம்ப்யூட்டர் டிவி, நூலகம், நவீன விளையாட்டு உபகரணங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன சுகாதார கழிப்பிடம் என்று அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.
1974ம் ஆண்டு ஈராசிரியர் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட போது இங்கு 30மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இதை அடியோடு மாற்றி, புதிய பயணத்திற்கு பாதை அமைத்தவர்கள், ஆசிரியர்கள் என்று பெருமையுடன் கூறுகின்றனர் கிராமத்து மக்கள்.
இது குறித்து இந்த பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர் தெய்வநாயகம் கூறியதாவது:
இந்த பள்ளியை, தற்போது மக்கள் கொண்டாடுவதற்கு இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த செயல்பாடுகளே காரணம். சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு, புதிய அணுகுமுறை என்ற நான்கையும் இந்த பள்ளியின் மேம்பாட்டுக்கான அடிநாதமாக வைத்துள்ளோம். நான் 2008ம் ஆண்டு இங்கு பணிக்கு வந்த போது, பள்ளியின் ஒரு பகுதி, கிராமத்து மக்கள், நெல்காயப்போடும் தளமாக இருந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று பள்ளியை சுத்தமாக வைத்திருக்க உதவவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். பிறகு ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்து சுற்றுச்சுவர் கட்டினோம். பிறகு எஸ்எஸ்ஏ திட்டத்தில் தலைமை ஆசிரியருக்கான அறையை
கட்டினோம். பின்பு கல்வி ஆர்வலர்கள், கிராமத்து மக்கள் உதவியுடன் நவீன கழிப்பறை, நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று அனைத்து வசதிகளையும் கொண்டு வந்தோம். இதே போல் மாணவர்களை ஈர்க்கும் வகையில் கற்றலில் புதுமைகளை கொண்டு வந்தோம். தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கு இசை வடிவில் கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஒவ்வொரு மாணவரும், வழக்கமான சொற்களை தவிர்த்து, ஒரு நாளைக்கு 5 கடுமையான ஆங்கிலச் சொற்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதால் 5 வருடத்தில் 20ஆயிரம் சொற்கள் அவர்களுக்கு எளிதாக மனதில் பதிந்து விடும். அவர்கள் 6ம்வகுப்பில் எந்த மெட்ரிக் பள்ளியில் சேர்ந்தாலும் எளிதாக பாடத்தை புரிந்து கொள்ள முடியும். இதே போல் சமூக விழிப்புணர்வு, இயற்கை பாதுகாப்பு, தனித்திறன் வளர்த்தல் என்று அனைத்து தளங்களிலும் மாணவர்களின் கவனத்தை கொண்டு செல்கிறோம். ஒரு காலத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே இருந்த ஊரில் இன்று பல பட்டதாரிகள், உருவாக இந்த பள்ளி காரணமாக இருப்பது தான் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.
தற்போது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மாணவர்கள், அமர்ந்து படிக்க போதிய இடவசதியில்லை. இதை கருத்தில் கொண்டு, அரசு புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தால், அது அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும். இவ்வாறு ஆசிரியர் தெய்வநாயகம் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...