பான்' கார்டு விண்ணப்பத்தில் தந்தை பெயர் கட்டாயமா?

பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில்,
தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பு அளிக்கும்படி, மத்திய நிதியமைச்சருக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா, கடிதம் எழுதியுள்ளார்.பான் கார்டுகள், அடையாள ஆவணமாகவும் பயன்படுகின்றன; இதில், எண் மற்றும் எழுத்துகளின் கலவையாக, 10 இலக்கங்கள் இடம் பெற்று இருக்கும்.
இது, வருமானவரித்துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதி உள்ளது.இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயலுக்கு, அமைச்சர் மேனகா எழுதியுள்ள கடித விபரம்: பல தனிப்பட்ட காரணங்களுக்காக, கணவரை பிரிந்து, ஏராளமான பெண்கள் தனியாக வாழ்கின்றனர்.
இவர்கள், தங்கள் முன்னாள் கணவரின் பெயரை, ஆவணங்களில் சேர்க்க விரும்புவதில்லை. எனவே, பான் கார்டுக்கான விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை எழுதாமல் விடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இதற்கு முன், கணவரை பிரிந்து வாழும் பெண்கள், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற, முன்னாள் கணவரின் கையெழுத்து மற்றும் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை எதிர்த்து, 2016ல், வெளியுறவுத்துறைக்கு, மேனகா கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்று, பாஸ்போர்ட் விதிகளில், வெளியுறவு அமைச்சகம் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this