கல்வித்தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகள்தான் காரணம் - ஐகோர்ட் கண்டனம்


தென்காசி கல்வி அலுவலருக்கு
ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி கல்வி அலுவலர் போன்றவர்கள் தான் கல்வித்தரம் குறைய காரணம் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வசந்தி என்ற ஆசிரியைக்கு பதவி உயர்வு வழங்காமல் அலைக்கழித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கல்வித்தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகள்தான் காரணம் எனத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பாடமாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வசந்தி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதற்கு அங்கீகாரம் வழங்க தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் மறுத்துள்ளார். முன்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியில் சேராமல் ஓய்வு பெற்ற ஆசிரியரின் விடுப்புக் கடிதம் இருந்தால் மட்டுமே அங்கீகரிக்க முடியும் எனத் தெரிவித்து காலம் கடத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற வசந்தி, தனது பதவி உயர்வை அங்கீகரித்து பணப்பயன்களை வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், பணியில் சேராமல் ஓய்வு பெற்றவருக்கு பணி விடுப்புக் கடிதம் கேட்கக் கூடாது என மற்றொரு வழக்கில் உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வசந்தியின் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை அங்கீகரித்து பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், கல்வியில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 16 ஆவது இடத்திற்குப் பின் தங்கியதற்கு தென்காசி கல்வி அலுவலரைப் போன்றவர்களே காரணம் என நீதிபதி தெரிவித்தார். தென்காசி கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Share this

0 Comment to "கல்வித்தரம் குறைய கல்வித்துறை அதிகாரிகள்தான் காரணம் - ஐகோர்ட் கண்டனம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...