தான் பணிபுரியும் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க, 70 மாணவர்களைக் காலையும் மாலையும் பள்ளிக்கும் வீடுகளுக்கும் அழைத்துப் போக அழைத்து வர ஏதுவாக, சொந்தப் பணம் நாலரை லட்ச ரூபாயில் காரை வாங்கி மாணவர்களை நெகிழவைத்திருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது சின்ன சேங்கல். இந்தக் கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் அன்புச்செல்வம் தான் அந்த ஆச்சர்ய ஆசிரியர். 'அரசுப்பள்ளி ஆசிரியர் வேலை என்பது, ஜாலியாக வேலைபார்த்துட்டு, சுளையாக சம்பளம் வாங்கலாம்' என்று சிலர் நினைக்கும் சூழலில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் குறைவதைத் தடுக்க இவர் செய்திருக்கும் முயற்சி உண்மையில் அசத்தல் முயற்சிதான். தலைமை ஆசிரியர் அன்புச்செல்வத்திடமே பேசினோம்.
சேங்கல் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கு வசிக்கும் அநேகம் பேர், அன்றாடம் கூலி வேலைக்குப் போய், அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை ஓட்டுகிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள், தங்களது பிள்ளைகளை 'நல்லா படிக்கவைப்பதாக' நினைத்துக்கொண்டு, அரசுப் பள்ளியில் சேர்க்காம தனியார் பள்ளிகளில் சேர்த்தாங்க. தலைக்கு மேல கடன் வாங்கித்தான் இப்படி செஞ்சாங்க.
எனக்கு சொந்த ஊர், இதே மாவட்டத்துல உள்ள புலியூர்தான். நான் இந்தப் பள்ளிக்கு 2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அப்போ, இந்தப் பள்ளியில் 78 மாணவர்கள் படிச்சாங்க. ஆனா, 2014 -ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 58 ஆகக் குறைஞ்சுட்டு. இதனால், எங்க பள்ளியில் பணிபுரிந்த மூன்று ஆசிரியர்களில் ஒருவரை, 'கூடுதல் போஸ்டிங்' என்றபடி கல்வித்துறை அதிகாரிகள் பணிமாறுதலில் அனுப்பப் போனாங்க. உடனே, நாங்க போய் இந்த ஊராட்சிக்குப்பட்ட 3 கிலோமீட்டர்களில் இருக்கும் மேலத்தோட்டம், குட்டிக்காரன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில், 'அரசுப் பள்ளியில் உங்க பிள்ளைகளைச் சேருங்க'ன்னு அறிவுறுத்தினோம். யாரும் கண்டுக்கலை.
காரணம், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர விடாமல் பண்ணுவதற்காக சில தனியார் பள்ளிகள், இந்தக் கிராமங்களுக்கு பஸ்களை அனுப்பி, தங்கள் பள்ளியில் பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்கவைக்கும்படிச் செய்தனர். இதனால், 2014 ஜூலை மாதம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர வைப்பதற்காக, வேகன்-ஆர் காரை வாங்கினேன். அதனால், அப்போதே அஞ்சு மாணவர்கள் எங்க பள்ளியில் வந்து சேர்ந்தாங்க.
மகிழ்ச்சியாக பயணிக்கும் மாணவர்கள்
காலையில் மாணவர்களை பிக்கப் பண்ண மூன்று ட்ரிப், மாலையில் வீடுகளில் பிள்ளைகளை விட மூன்று ட்ரிப்னு நானே காரை ஓட்டிட்டு போனேன். ஆரம்பத்துல 5 பேரை காரில் அழைச்சுட்டு வந்து, அழைச்சுட்டு போய் விட்டேன். இதனால் பெற்றோர்கள் ஆர்வமாகி, தங்கள் பிள்ளைகளை எங்க பள்ளியில் சேர்த்தாங்க. இதனால், எல்.கே.ஜி, யூ.கே.ஜி பிள்ளைகளையும் சேர்த்து இப்போ, 120 பிள்ளைகளா எண்ணிக்கை கூடியிருக்கு. இதற்காக, 2018 செப்டம்பர் மாதம் சொந்தப் பணம் நாலரை லட்சத்தைப் போட்டு, பெரிய காரான டவேரா காரை வாங்கினேன். இதுல இப்போ 70 பிள்ளைங்களை ஏத்திகிட்டுபோறேன். இதற்கு டீசல் போட மாசம் ரூ.14,000 வரை செலவாகும். அதையும் சொந்தப் பணத்துலதான் செலவு செய்றேன்.
மாணவர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டபோது...
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை அழைக்கவும், வீடுகளில் விடவும் நானே காரை ஓட்டிக்கிட்டுப் போறேன். இதனால், நான் அதிகம் விடுப்பு எடுப்பதில்லை. அப்படியே எடுக்க நேர்ந்தாலும், அன்றைக்கும் காலையில் மாணவர்களை அழைத்து வருவதும், வீடுகளில் விடுவதும் நான்தான். கல்வி கற்பித்தல் விசயங்களிலும் பல முன்முயற்சிகளைச் செய்கிறோம். `அரசுப் பள்ளியில் எல்லா நன்மைகளும் இருக்கு. அதை விட்டுட்டு, சக்திக்கு மீறி வட்டிக்குக் கடன் வாங்கி ஏன் பிள்ளைங்களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கணும்?'னு ஒவ்வொரு பெற்றோரையும் யோசிக்கவைக்கவே, என்னாலான சின்ன முயற்சி இது" என்று தன்னடக்கத்தோடு முடிக்கிறார்.
`இந்தக் காலத்திலும் இப்படியும் ஒருவரா?’ என்ற ஆச்சர்யம் இதுவரை நமக்கு விலகவில்லை.
super sir...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஉள்ளம் நிறைவுடன் பாராட்டுகிறோம்.