10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு
மே 13-ம் தேதி முதல் இணையதளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10,12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேருவதற்காக பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு முதல் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் வழியாக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எமிஸ் இணையதள வேகம் குறைவாக இருப்பதால் ஒரே நாளில் பலர் கூடும்போது சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அதிக நேரம் பயன்படுத்தும்போது இணையதளம் முடங்கிவிடுவதால் தகவல்களை சரியாக பதிவேற்றம் செய்ய முடியவில்லை என பள்ளிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளிகள் கூறிய குறைபாடுகளை சரிசெய்து புதிய மென்பொருள் தயாரிக்கும் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இணையதள மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதன்படி அனைத்து தலைமையாசிரியர்களும் எமிஸ் இணையதளத்தில் மாணவர் முழுவிவரங்களை பெறலாம். அதை நகல் எடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். மற்றொரு நகல் பள்ளியில் பாதுகாக்கப்படும்.இதற்கிடையே எமிஸ் இணையதளத்தில் மாணவர் விவரங்களை ஒருமுறை பதிவிறக்கம் செய்தால் மீண்டும் அவை துறையின் பொதுசேமிப்பகத்துக்கு சென்றுவிடும். அதன்பின் மாணவர் விவரங்களை பெற முடியாது.
அதற்கு கல்வித்துறை அதிகாரியின் அனுமதி பெறவேண்டும். மறுபுறம் இணையதள வேகம் குறைவாக இருப்பதால் மாணவர் விவரங்களை முழுமையாக பதிவிறக்கம் செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன. இவற்றை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை முடிந்துவிடும். தொடர்ந்து மே 13-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளில் இணையதளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்’’என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...