Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் - அமெரிக்காவால் தயாரிக்க முடியாதா? உண்மை என்ன?





ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தும் சூழலியல் அரசியலும்!

கடந்த இரண்டு தினங்களாக ஊடக விவாதப்பொருளாக இருப்பது ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்து குறித்து அமெரிக்கா - இந்தியா இடையே நடைபெறும் மிரட்டல்/ அடிபணிதல் அரசியல்தான். குறிப்பிட்ட இந்த மருந்து கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்று திட்டவட்டமாக இன்னமும் முடிவிற்கு வராத நிலையிலேயே இந்த தகராறு.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிற்குத் தேவைப்படும் அல்லது அந்நாடு வாங்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தில் 47% இந்தியாவிலுள்ள நிறுவனங்களிடமிருந்துதான் செல்கிறது. இந்தியாவிற்கு அடுத்து அமெரிக்கா அதிகமாக வாங்கும் நிறுவனம் ஆக்டாவிஸ் (actavis) என்கிற இஸ்ரேலிய நிறுவனம். இந்த இஸ்ரேல் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் டேவா பார்மாசூட்டிகல்ஸ் (teva paharmaceuticals), இந்த டேவா பார்மாவின் தொழிற்சாலை குஜராத் மாநிலம் Sanand இல் உள்ளது, ஆக இஸ்ரேலிய நிறுவனம் கொடுக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தும் கிட்டத்தட்ட இந்தியாவில் உற்பத்திசெய்யப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது சைடஸ் பார்மா (zydus pharma )தான். இது அகமதாபாத்தில் இருக்கும் கெடிலா ஹெல்த்கேர் (Cadila healthcare) நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சைடஸ் பார்மா இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் மருந்தில் 33.4%ஐ ஏற்றுமதிசெய்கிறது.

இதுமட்டுமல்லாமல், இந்த ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தின் மூலக்கூறும் இந்தியா வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தை அமெரிக்காவை சேர்ந்த மைலேன் Nv (mylan Nv) நிறுவனம் உற்பத்தி செய்ய அரசு பணித்தாலும் அந்த நிறுவனத்தால் இந்த மூலக்கூறு இல்லாமல் உற்பத்தி செய்யமுடியாது. இந்தியா இந்த மருந்தையும் அதற்கான மூலக்கூறின் ஏற்றுமதியை தடைசெய்ததும் அமெரிக்கா பதற்றமடைந்தது அதனால்தான்.

ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தை 1955ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மிகவும் அடிப்படையாக மருந்துகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் எழுதப்படும் சுமார் 50 லட்சம் மருந்து சீட்டுகளில் இந்த மருந்து இடம்பெற்றிருக்கும். இந்த மருந்து மட்டுமல்ல, அமெரிக்காவின் தேவையில் 80% மருந்துகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்துகொள்கிறது. தன்னுடைய தேவையில் வெறும் 20% மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்துகொள்கிறது.

உலக மருத்துவ சந்தையில் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது.  உலகத்தில் உள்ள மருத்துவ சந்தையின் மதிப்பு 1.205 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில் அமெரிக்காவின் சந்தை 38% அதாவது 480 பில்லியன் டாலர்கள். மருந்துகள் மட்டுமல்ல, API (Active pharmaceutical ingredients) என்று சொல்லக்கூடிய மூலப்பொருட்களையும் அமெரிக்கா உற்பத்திசெய்வது கிடையாது. இவ்வளவு பெரிய சந்தை இருந்தாலும், மருத்துவ உலகில் அதிகமான காப்புரிமைகளை அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருந்தாலும், மருந்து அல்லது மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடையாது. இந்த பின்னணியில்தான் அடுத்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா ஏன் மருந்துகளையும் மூலக்கூறுகளையும் உற்பத்தி செய்வது கிடையாது?
ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் ஏற்றுமதி தடைநீக்கப்பட்டதற்குக் காரணம், அமெரிக்காவின் மிரட்டலா அல்லது இம்மருந்துகளை அதிகம் ஏற்றுமதி செய்கின்ற குஜராத் நிறுவனங்களா என்கிற விவாதத்திற்குள் செல்லாமல், அமெரிக்காவில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படும் ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் போன்ற மருந்துகளை ஏன் அமெரிக்கா உற்பத்தி செய்வதில்லை என்கிற கேள்விதான் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். எந்த பகுதியில் இதைப்போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசடைந்துவிடும். தமிழகத்தில் கடலூர் ஒரு நல்ல உதாரணம். விசாகபட்டினம்/கிருஷ்ணபட்டணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஃபார்மா தொழிற்பேட்டைகள் இதற்கு கொடுமையான மற்றொரு உதாரணம். பிரிட்டனில் இதைப்போல அமைக்கப்பட்டிருந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்த உயிர்கள் சோதனை செய்யப்பட்டன. அதில் பெண் கடலுயிருக்கு ஆண் கடலுயிரில் காணப்படும் உறுப்புகள் தென்பட்டதோடு, சில சிதை மாற்றங்களும் காணப்பட்டன. அதைப்போலவே ஆண் கடலுயிர்களில் முட்டைகளில் உள்ள புரதங்கள் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடல் உயிர்களில் ஏற்பட்ட இந்த சிதைவுகளுக்கு காரணம் அருகில் இருந்த மருந்து மூலக்கூறு உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறிய ethynyl oestradiol என்று பின்னர் கண்டறியப்பட்டது.

மேற்சொன்னவை மட்டுமல்லாமல், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அருகில் ஆண்டிபையோட்டிக்ஸ் வெளியாகி அங்கிருக்கின்ற உயிரினங்கள் அதற்கு பழகிப்போய், மனிதர்களுக்கு உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை குறைத்துவிடுகின்றன (anti- micorbial resistance) என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 2016 ஆம் ஆண்டு, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஐதராபாத் அருகில் உள்ள பெரிய மருந்து தயாரிக்கும் வளாகத்திற்கு அருகில் உள்ள பட்டஞ்சேறு - பொல்லரம் கிராமங்களில் பல்வேறு மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் anti-microbials காணப்பட்டது. கண்டறியப்பட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகளில் 95% anti-biotic மருந்துகளுக்கு கட்டுப்படாதவையாக இருந்தது அவர்களுக்கு கவலை அளித்தது. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மருந்துகள் ஹைதராபாத் அருகில் உள்ள இந்த உற்பத்தி மண்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வளாகத்தில் 170 நிறுவனங்கள் உள்ளன. அதில் 20 நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான anti-bioticsஐ உற்பத்திசெய்து அனுப்புகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் சிலவைதான். விரிவாக எழுதுவதற்கு பக்கங்கள் பத்தாது.

இந்த பதிவின் நோக்கம் முக்கியமான மருந்துகளை கூட வளர்ந்த நாடுகள் உற்பத்தி செய்யாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்வதற்கு காரணம் அவர்களுடைய சூழலை பாதுகாக்கவேண்டுமென்ற நோக்கம்தான். சுற்றுச்சூழலை பாதிக்காமல் இம்மாதிரியான மருந்துகளை உற்பத்தி செய்யமுடியாதா என்றால், முடியும் ஆனால் மிக அதிகமாக செலவாகும்.  இதுதான் ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் போன்ற மருந்துகளின் பின்னனியில் உள்ள சூழலியல் அரசியல் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

By
Thirunavukkarasu Arasu




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive