எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜன.4) தொடங்குகிறது. முதல் நாளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதன் பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வும், நிா்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வும் நடைபெற்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முதலில் நடைபெறவுள்ளது. 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ஆம் தேதி பிற்பகல் முதல் 13-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதிக் கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள்நிரப்பப்படவுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...