கல்வி மேலாண்மை தகவல் மையம் (EMIS) இணையதளம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தரவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இது இணையதளம் மற்றும் செயலி மூலமாக ஆசிரியர்களிடையே இருவேறு முறைகளில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வித்தைப்புரிந்திடும் புழக்கம் நடைமுறையில் இருந்து வருவது வேதனையான ஒன்று. இந்நடைமுறையில் பள்ளி ஆசிரியர்கள் செல்பேசி, கணினி, மடிக்கணினி மற்றும் தங்கு தடையற்ற இணையத் தொடர்பு வசதிகள் போதிய அளவில் கிடைக்கப்பெறாமல் பெரிதும் அல்லலுறும் அவலநிலை சொல்லிமாளாதது.
இதன்
காரணமாக, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் வெடிப்பிற்கு தம்மை
உட்படுத்திக் கொள்ளாத, விரும்பாத பலபேர் இந்த வேலையின் பொருட்டு நகரங்களில்
உள்ள கணினி மையங்களில் அல்லும் பகலும் தவமிருந்து வருவது வேடிக்கையானது.
இருவேறு தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் இத்தளத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு
வருவது அவசர அவசியமாகும். அதுபோல, இத்தளத்தைத் திறம்பட ஒவ்வொரு ஆசிரியரும்
தாமே சுயமாக, தத்தம் பள்ளி சார்ந்த தரவுகளைப் பிழையின்றிப் பதிவேற்றிட
தக்க பயிற்சியும் வழிகாட்டலும் அளிக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.
தற்போது
இதற்கான இணையதளம் முன்பிருந்ததைவிட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது
பாராட்டுக்குரியது. காலவிரயமும் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மாநில,
மாவட்ட, வட்டார அளவில் பல்வேறு ஐயப்பாடுகளை உடனடியாக களைய வல்லுநர் குழு
அமைக்கப்பட்டிருப்பதும் தக்க தீர்வுகளைக் கவனமுடனும் கனிவுடனும்
பரிசீலித்து உரிய உகந்த நடவடிக்கைகள் எடுத்து வருவது வரவேற்புக்குரியது.
எனினும், தவறுதலாக ஏற்படும் பிழைகளை எந்த நிலையிலும் சரிசெய்திடும்
வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சான்றாக,
ஒரு மாணவரின் பதிவில் தவறுதலாக நிகழ்ந்த ஏதேனும் ஒரு பிழையைப் போக்க
உலகத்தைச் சுற்றி வர முருகக் கடவுள் எடுத்த பகீரத முயற்சியை சம்பந்தப்பட்ட
பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு சரிசெய்திடும் போக்குகள் மாற்றியமைக்கப்
படவேண்டும். மாற்றுச் சான்றிதழ் திருத்தம் மற்றும் பதிவேற்றம் ஆகியவற்றை
மேற்கொள்ளும் உட்பிரிவின்
(TC
Details) முடிவில் தற்செயலாக நிகழும் பிழைகள் மற்றும் விடுபாடுகளை
மீண்டும் சரிசெய்திடும் வாய்ப்புகள் (TC Update) எனும் கலத்தில் இல்லாதது
பெரிய குறையாக உள்ளது.
இதனைச்
சரி செய்திட முன்னாள் மாணவர் விவரப் (Past Students List) பகுதிக்கு
அனுப்பி வைக்கப்பட்ட பிழைத்திருத்தம் தேவைப்படும் மாணவரை, மாணவர் பிரிவில்
உள்ள மாணவர் சேர்க்கை (Students Admission) உட்பகுதியில் புதிய மாணவர்
சேர்க்கை போல் உட்படுத்துதல் முதற்படி. அதன்பிறகு, மாணவர்கள் விவரம்
(Students List) அடங்கிய உட்பிரிவிற்குள் புதிதாய் சேர்க்கப்பட்ட பள்ளி
இறுதி வகுப்பு அல்லது மாற்றுச் சான்றிதழ் கோரும் முன்னாள் மாணவரின் பழைய
பிழையைத் திருத்தம் (Edit) மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் புதிதாக
உருவாகியிருக்கும் நடப்பு பள்ளி சேர்க்கை நாள் (Joining Date) பதிவை
மீளவும் முன்னர் குறிப்பிடப்பட்ட நாளை மறவாமல் பதிவிடுதல் அவசியம். பின்னர்
இறுதி வகுப்பு(Terminal Class) கொடுத்துப் பதிவேற்றுவதன் வாயிலாக அந்த
மாணவரை மறுபடியும் பொது மாணவர்தொகுதிக்குச் (Common Pool) சென்றடைய
வைக்கும் நிகழ்வானது எளிதானதல்ல.
மேலும்,
இத்தகைய மாற்றுச் சான்றிதழ் புதுப்பிப்பு (TC Update) பிழைத்திருத்த
நடவடிக்கைகளை இரண்டு தடவைக்கு மேல் செய்ய அனுமதி இல்லை. அதன்பிறகு மாவட்ட
அளவிலான வல்லுநர் குழுவினர் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்கிற நிலை
பல்வேறு இடர்பாடுகள் தரவல்லவை. இந்த பிழைத்திருத்தக் கட்டுப்பாடுகளை
நீக்கி, ஆசிரியர் பதிவேற்ற செயற்பாட்டில் உள்ள பணிப்பளுவைக் குறைக்க மாநில
வல்லுநர் குழு முன்வரவேண்டும்.
இதுதவிர,
கடந்த காலங்களில் இருந்தது போலவே மாற்றுச் சான்றிதழ் செயற்பாட்டின்
இறுதிப் பகுதியில் காணப்படும் பதிவிறக்கம் (Download) எனும் கலம்
தோற்றுவிக்கப்படாதது ஒரு பெரும் குறையாக ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதற்கான சிறப்பான இணைப்புச் செயலி (Add on) மேசைக் கணினி மற்றும்
மடிக்கணினியில் இல்லாத பட்சத்தில் மாணவருக்குரிய மாற்றுச் சான்றிதழை உரிய
முறையில் பதிவிறக்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் அச்சு எந்திரம்
(Printer) வசதியுடையவர்களால் மட்டுமே சான்றிதழைப் படியெடுத்துத்
தரமுடிவதாகவும் அறிய முடிகிறது. இந்த சிக்கல் உடனடியாகக் களையப்படுதல்
நல்லது.
முனைவர் மணி கணேசன்
முனைவர் மணி கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.சரியான நேரத்துள்ளீர் ,நன்றி.பிழைத்திருத்தத்திற்காக மீண்டும் புதிய சேர்க்கையாக உள்ளே சென்று திருத்தம் செய்து மீண்டும் மாற்றுச்சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் போது கலம் எண் 9 ல் முதன்முதலில் பள்ளியில் சேர்ந்த வகுப்பு 5 என்றும் சேர்ந்தநாள் திருத்த செய்த தேதி தவறாக வந்துவிடும்.ஆதலால் பிழைக்காக மீண்டும் புதிய சேர்க்கையில் நுழைய வேண்டாம்.பிழைத்திருத்த மீண்டும் ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்று உரிய மின் அஞ்சல் முகவரிக்கு கோரியுள்ளோம்.உரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என் நம்புகிறோம்.
ReplyDelete