Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Mahathma Gandhi மதுரையில் அரை ஆடைக்கு மாறிய நாள் - Sep. 22

     தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால்  மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் 'ஏதென்ஸ் நகரம்' என மதுரைக்கு பெயர் உண்டு.
முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை:

       இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா  காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக
காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை  முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.
கன்னிப் பயணம்:
        ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார்.  மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர்  சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் '251 ஆ' என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை   இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை  உடுத்த துவங்கி 'மகாத்மா'வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர  அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.
மூன்றாம் வருகை:
     சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது  முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து 'ஆலய பிரவேச இயக்கத்தை' துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன்  போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது.
12 ஆண்டுகளாயிற்று:
       ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல்  மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு  வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive