Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.




மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.

'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்

களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.

நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.

வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை

இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.

மினரல் வாட்டர் என்றால் என்ன?

காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் 'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான். மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.

'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல' என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.

மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

நீரைக் குடிக்கும் முறை

மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.

நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.

தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்

மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.

ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.

நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.

கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.

வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

காய்ச்சிய தண்ணீர்

தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன்.




2 Comments:

  1. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

    தொடர்புக்கு :

    மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

    ரிஷி

    முனுசாமி -- 9940242636


    துரை -- 8608568256

    ReplyDelete
  2. வருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .

    தொடர்புக்கு :

    மு.ஜெயகவிதபாரதி -- 9486948138

    ரிஷி

    முனுசாமி -- 9940242636


    துரை -- 8608568256

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive