Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

     அதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
 
      ஒவ்வொரு கரும்பலகையின் முன்பும் சில பெஞ்சுகள் போடப்பட்டு அதில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் பத்திலிருந்து இருபது மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பு. அது தான் மொத்த பள்ளிக் கூடமும். சுமார் 150 மாணவ மாணவிகளின் மத்தியில் ஒற்றை ஆளாக அங்குமிங்கும் ஓடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியை பத்மினி. அது சிதம்பரம் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி!


நாங்கள் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு வேளையின் போது சென்றடைந்தோம்.

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி
சிதம்பரம் நகரத்தின் மையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி
“சார், ஒரு பத்து நிமிசம் காத்திருங்க. உணவு இடைவேளை துவங்கியதும் நாம் பேசலாம்” என்று எங்களிடம் கத்தரித்துக் கொண்ட ஆசிரியை பத்மினி, வகுப்புகளின் இடையே ஓடியாடுவதைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடிக்கப்பட்டது. உரையாடத் தொடங்கினோம்.
“இங்கே நீங்கள் மட்டும் தான் ஆசிரியையா?”
“இன்னும் சில ஆசிரியைகள் இருக்காங்க. இப்ப அவங்கெல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்” என்றவர், பின்பக்கமாகத் திரும்பி தனது உதவியாளரிடம் “எல்லாரையும் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடத் துவங்குங்க. நான் இதோ வந்துடறேன்” என்றார்.
“ஏன் ரவுண்ட்ஸ் போக வேண்டும்?”
“ஒரு காலத்துல ரொம்ப நல்லா நடந்த பள்ளிக்கூடம் சார் இது. பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. இப்போ பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்கிறாங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க. மதிய உணவு சமயத்தில எங்க ஆசிரியைகள் இந்தப் பகுதியில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைப் பார்த்து எப்படியாவது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கப் போயிருக்காங்க”
பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கௌரவம் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட பத்மினி, தனியார் பள்ளிகளில் உடல் ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், இங்கே தாங்கள் அப்படியான பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். தனது பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவருமே ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
“போன வாரம் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை என்கிட்டே வந்து தொண்டை வலிக்குதுன்னு சொல்லி அழுதிச்சு சார். சாப்பிட்டியான்னு கேட்டேன். முந்தைய நாள் மதியம் இங்கே சாப்பிட்ட சத்துணவுக்குப் பின் எதுவும் சாப்பிடலைன்னு சொல்லிச்சி சார். மனசு கஷ்டமா போயிடிச்சு. நாங்க சாப்பிட வச்சிருந்ததை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னோம் சார்… பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளை ஏன் படிக்க அனுப்பறோம்னே தெரியலை. மாணவர்களுக்கும் ஏன் படிக்க வர்றோம்னு தெரியலை. இங்கே சுத்து வட்டாரத்தில் நிறைய கவரிங் பட்டறைகள் இருக்கு. திடீர்னு படிப்பை நிப்பாட்றவங்க, அந்தப் பட்டறைகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க. நாங்க அவங்க பெற்றோர்கள் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கிறோம் சார்.”
ஆசிரியை பத்மினி தழுதழுக்கும் குரலில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கவனம் முழுக்கவே குழந்தைகள் சாப்பிட்டார்களா என்பதிலேயே இருந்தது. இடையில் அவகாசம் கேட்டுக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்காணிக்கச் சென்று விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி பள்ளிக் குழந்தைகள்
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்
அந்த மாணவர்களில் பலரும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிந்தது. பல மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாகவே இருந்தனர். மாணவர்களும் ஒரு சில நாட்கள் பள்ளிக்கும் பெரும்பாலான நாட்கள் கூலி வேலைகளுக்கும் செல்வதாகத் தெரிவித்தனர். தங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகி விட்டதால் அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதில்லை என்றும், எனவே தாங்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.
சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.
உலக வங்கியின் கடன் பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது. 21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது, தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.
அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய தூண்கள் தான் மாணவ சமுதாயத்தை தாங்கி நிற்கின்றன. எனவே இவை மூன்றையும் சேர்த்துத்தான் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் இமையம்.
ஆசிரியர்களுக்குப் முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என்பதோடு சேர்த்து எந்த வரைமுறையுமின்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்துக் கொண்டிருக்கிறது அரசு. தனியார் கல்வி வியாபாரிகள், ஊருக்கு வெளியே – மக்கள் வாழ்விடங்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் – சில பத்து ஏக்கர்கள் அளவுள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தங்கள் கல்வித் தொழிற்சாலைகளைத் திறக்கிறார்கள்.
50 கிலோ மீட்டர்கள் வரை கூட பள்ளிப் பேருந்துகளை அனுப்பி மாணவர்களை அள்ளி வரும் இவர்கள், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிமான வசதிகளைக் கூட பள்ளிகளில் செய்து கொடுப்பதில்லை. தமிழகமெங்கும் நச்சுக் காளான்கள் போல் பரவியிருக்கும் தனியார் பள்ளிகளில் சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரமே இல்லை. தனியார் பள்ளிகளின் கல்வி முறையோ, பட்டியில் போட்டு பன்றிகளை வளர்ப்பதற்கு ஒப்பாக மாணவர்களை அணுகுவதாய் இருக்கிறது. எந்த சமூக அறிவோ, பொறுப்போ இல்லாத தக்கை மனிதர்களையே தனியார் பள்ளிகள் சமூகத்திற்குப் பரிசளிக்கின்றன.
கட்டணக் கொள்ளை அடிப்பது ஒருபுறமிருக்க, படிக்காத மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுப்பது, மாணவர்களுக்கு விளையாட்டை மறுப்பது, அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஓய்வு நேரத்தைக் கூடக் கூடக் களவாடுவது என்று அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானவைகளாக தனியார் பள்ளிகள் இருக்கின்றன. எனினும் பெற்றோர் அப்பள்ளிகளைத் தான் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்கள்.
அரசும் ஆசிரியர்களைக் கண்காணிப்பதிலோ, அவர்களை தரமுயர்த்துவதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சியாளர்கள் குறைவு என்பதோடு இருப்பவர்களும் எந்தவித வகுப்பறை அனுபவமும் இல்லாதவர்கள் என்கிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன். உதாரணமாக ஒரு பாடத்தைப் பற்றிய சிந்தனை வரைபடம் (Mind map) தயாரித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆற்றலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய இவர்களுக்கே அது தொடர்பான அனுபவ அறிவு இல்லை என்கிறார் அவர்.
“ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்” என்கிறார் இமையம்.
அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக வைத்துக் கொண்டு தனியே வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது என்று பல்வேறு வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்கிற பிழைப்புவாத கண்ணோட்டமே பல ஆசிரியர்களிடமும் நிலவுகிறது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை பத்மினி போன்றவர்கள் அபூர்வமான விதிவிலக்குகள்.
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியை பத்மினி
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் மதிய உணவு நேரத்தின் போது – தலைமையாசிரியை பத்மினி
”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா?” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்? ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல?” என்று கேட்கிறார்.
மேலும், “மாணவர்களின் வாழ்க்கைக்கான ஆசான்களாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. முன்பு ஆசிரியர் என்பவர் பள்ளிக்கு அருகாமையில் வசிக்க வேண்டும் என்கிற விதி கறாராகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கும், ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் குடும்பத்தின் சமுகப் பொருளாதாரப் பின்னணி குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந்தது. தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 30 அல்லது 40 கிலோ மீட்டர் தூரத்தில், தள்ளி வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.“
“மாணவர்களின் மீது எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிடிப்புமற்று ஆசிரியப் பணியே கூலிக்கு மாரடிப்பது என்கிற அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது. மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏன் வருவதில்லை என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது. மாணவர்களின் சமுக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவற்ற ஆசிரியர்களால், அவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளின் மீது எந்த வகையான மேலாண்மையையும் செலுத்த முடிவதில்லை” என்று நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் இமையம்.
“சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளியொன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு மாணவிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக வகுப்பறையிலேயே பீர் குடித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் பீர் குடிக்கலாம் என்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இணையம், செல்போன் உள்ளிட்ட நவீன விஞ்ஞான சாதனங்கள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியில் வெகு வேகமாக சீரழிகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாஸ்மாக்” என்று மாணவர்களிடையே பரவும் கலாச்சாரச் சீரழிவை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன்.
தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியில் அடைத்து பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களோ கட்டுப்பாடற்றவர்களாக சீரழிவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த சமூகப் பண்பாட்டு பின்புலத்தில், கல்வியை அரசு புறக்கணித்து வருவதன் விளைவுதான் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி. சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து போயிருப்பதையும், மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போவதையும் இந்தப் பின்னணியில் வைத்துதான் பரிசீலிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் அவல நிலைமையை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கொள்ளையடித்துக் கல்லா கட்டத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்ளைக்கு உதவும் விதத்தில் ஆண்டு தோறும் தமிழக அரசே கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கிறது. சென்னையில் ஒரு மழலையர் பள்ளிக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 30,000 க்கு மேல் என்று அரசே நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது.
இதுவும் போதாதென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் போல பன்மடங்கு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றன தனியார் பள்ளிகள். எந்தவித கணக்கோ, ரசீதோ இல்லாமல் பள்ளி முதலாளிகள் நடத்தும் இந்தக் கொள்ளைக்கு வழக்கம் போல கல்வித்துறை, அதிகார வர்க்கம் துணை நிற்கின்றன. கட்டணக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட பெற்றோர் சங்கத்தினரை காசுக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்பட்டாளத்தை வைத்து மிரட்டியிருக்கிறார், சிதம்பரம் வீனஸ் பள்ளியின் முதலாளி.
”தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால். 1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கும் மக்கள், அரசுப் பள்ளிகள் நம்முடையவை என்பதையும், கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதையும், கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் உணர வேண்டியது அவசியம் என்கிறார் ராஜகோபால். மேலும், மக்கள் சாதாரணமாக வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையிலும் கல்விக்கான 2 சதவீத வரியும் சேர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் சீரழிகின்றது என்பதன் பொருள் தமது சொந்தப் பணம் பறிபோவது தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவது அரசின் கடமை என்பதையும் மக்களே மறந்து போகும் அளவுக்கு தனியார்மயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அரசும், ஆளும் வர்க்கமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது போய் பாட்டில் பத்து ரூபாய் அம்மா வாட்டர், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பதற்குப் பதில் இன்சூரன்சு திட்டம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று எல்லாத் துறைகளிலும் தனியார்மயமே நியதி என்று ஆக்கப்பட்டு வருகிறது.
இதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டப் பள்ளிகளில் நாம் பார்த்த நிலைமைகள்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. சென்னையிலும் கூட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய மிக மோசமான சூழலிலும், தங்களது அளப்பறிய ஈடுபாட்டின் காரணமாக சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மிகக் கடுமையாக உழைத்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.
இருப்பினும் கல்வி உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்று தேவைப்படுவது ஒரு போராட்டம். தனியார் கல்வி முதலாளிகளையும், அவர்களது புரவலரான இந்த அரசையும் எதிர்த்த போராட்டம். மொத்தத்தில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான போராட்டம்!
- புதிய கலாச்சாரம் செய்தியாளர்




1 Comments:

  1. உண்மைதான் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியஇனமும் உள்ளது அதேசமயம் எவன்கெட்டால் நமக்கென்ன நமக்கு பணம் வந்தால் சரி என்கிற ஆசிரிய சமுதாயமும் உள்ளது .
    மனசாட்சியோடு ஆசிரியர்கள் பணியாற்றுவதும் இலவச கட்டாய கல்வியை அரசு முறையாக வழங்குவதும் இந்த இழிநிலையை போக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive