NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காவிரி ஆறு கட்டுரை

            காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. 
 
         இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா,பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர்,திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் நதிகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில் இருந்திருக்கிறது.

காவிரி ஆற்று மணலில் தங்கத் துகள்கள் இருந்திருக்கின்றன என்பதைத் திருஞான சம்பந்தர் தனது தேவாரப் பாடல் ஒன்றில் [1] 'பொன்கரை பொரு பழங்காவிரி' என்று காவிரி நதிக்கரை மணலில் பொன் துகள்கள் இருந்ததை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

இன்குரல்இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர் ---
பொன்கரை பொரு பழங்காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.



துணை ஆறுகள்


கபினி, ஹேமாவதிஹாரங்கி , லட்மண தீர்த்தம் ,  ஆர்க்காவதி , சிம்சாசொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானிஅமராவதிநொய்யல்ஆகியன தமிழக பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.

இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.

அணைகள்

மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை,  கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

அருவிகள்

கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும்காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
ஒகேனக்கல் அருவியை தாண்டி செல்லும் காவிரி

தீவுகள்

கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.

கர்நாடகத்தில் காவிரியின் போக்கு

தலைக்காவிரி - காவிரி உற்பத்தியாகும் இடம்

குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது.கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி மற்றும் சொர்ணவதி ஆறுகள் காவிரியுடன் இணைந்து கொள்கின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902ல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர், இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். ( தெய்வ ஆடு மட்டுமே தாண்ட முடியும் )
Mekedat.jpg

தமிழகத்தில் காவிரியின் போக்கு

பவானி காவிரியுடன் கூடும் இடம் - பவானி கூடுதுறை
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானிஎன்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி & குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர்திருவாரூர்நாகப்பட்டிணம் மாவட்டங்கள் & புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.

பயன்பாடு


காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.

நீர் பங்கீடு

காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.

  • கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
  • தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
  • கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ




2 Comments:

  1. அருமையான கட்டுரை
    வாழ்த்துக்கள்
    இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளை
    மாணவா்கள் சாா்பாக எதிா்பாா்கிறோம்

    ReplyDelete
  2. பயனுள்ள கட்டுரைகள் தொடர்ந்து வெளி வர வாழ்த்துகின்றோம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive