Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார்... ஆதி முதல் அந்தம் வரை

* புதிய கார்டு பெறுவது எப்படி
* தவறாக இருந்தால் திருத்துவது எப்படி
* தொலைந்தால் என்ன செய்வது
          ஆதார் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருக்கும். தனி மனிதனின் தேவைகளை, அவனுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும். காஸ் சிலிண்டர் விஷயத்தில் நடந்த மோசடி. அதில் சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் சில டெலிவரி பாய்கள் நடத்திய மகா மோசடிகள் தலையை கிறுகிறுக்க வைக்கும்.
 
          வாடிக்கையாளருக்கு வந்த காஸ் சிலிண்டரை.. இன்னும் வரவில்லை என்று கூறி கள்ள மார்க்கெட்டில் ரூ. 420 சிலிண்டரை ரூ.900க்கு விற்று வருமானத்தை பார்த்துள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ஒரு சிலிண்டருக்கு மானிய வகையில் 480 இழப்பு.. வாடிக்கையாளருக்கும் உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்காமல் தவிக்கும் நிலை. சில காஸ் ஏஜென்சிகள் போலி பெயர்களில் பதிவு செய்து அந்த சிலிண்டர்களை கள்ள மார்க்கெட்டில் விற்று மாதத்துக்கு பல லட்சங்களை முறைகேடாக சம்பாதித்தனர். காஸ் இணைப்பு தற்போது ஆதாருடன் இணைக்கப்பட்டதால், இனி போலி பெயர்களில் நடந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை தடுக்கப்படும். இனி காஸ் சிலிண்டரை பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியாது. மத்திய அரசின் ஒரு திட்டத்திலேயே இவ்வளவு முறைகேடுகளை தடுத்து.. உண்மையான பயனாளிக்கு மானியம் சேர காரணமாக இருப்பது ஆதார். ஒரு திட்டத்துக்கே இப்படி என்றால்.. அரசின் அனைத்து திட்டங்களிலும் குறிப்பாக பணம் புரளும் திட்டங்களில் கொண்டு வந்தால்.. அடித்தட்டு மக்கள் உண்மையான சலுகையை நேரடியாக அனுபவிப்பார்கள். ஆதார் அட்டை எடுப்பதில் சிக்கல். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமை. பழைய கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்வெட்டு பிரச்னைகளை கடந்து ஆதார் இன்று பெரும்பாலானவர்களின் வீடுகளில் உள்ளது.
எனினும் இன்னும் பலரும் ஆதார் அட்டை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் தத்தளித்து வருகின்றனர். திருத்தங்களை எப்படி செய்வது என தெரியாமல் தடுமாறுகின்றனர். வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. வருங்காலங்களில் வங்கியில் பணம் எடுப்பதற்கு, பணம் போடுவதற்கு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு, ரயில், விமான டிக்கெட், பள்ளி, கல்லூரிகளில் சேர மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவி திட்டங்கள், இலவச திட்டங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று படிப்படியாக உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும். அதனால், அனைவரும் ஆதார் கார்டு வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதனால், ஆதார் கார்டு பெறுவதற்கான முகாம் அருகில் இருக்கிறதோ, தூரத்தில் இருக்கிறதோ பொதுமக்கள் கஷ்டப்பட்டு ஆதார் எண் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருடனை உடனே பிடிக்கலாம்: ஆதார் எண் வழங்கினால், பொதுமக்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறதோ இல்லையோ அரசாங்கத்துக்கு அதிக உதவியாக இருக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகளை மத்திய, மாநில அரசுகள் எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஒரு வீட்டில் திருட்டு போயிருந்தால், அங்கு கிடைக்கும் கைரேயை எடுத்து, ஆதார் எண் வாங்குவதற்கு நாம் வழங்கிய கைரேகையுடன் ஒப்பிட்டால் ஒரு சில நிமிடங்களில் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். சிக்கும் விஐபிகள்: விஐபி மற்றும் விவிஐபி போன்ற பெரிய பணக்காரர்களுக்கு ஆதார் கார்டு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தலாம். காரணம், அவர்களின் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படக் கூடும். அளவுக்கு அதிகமான பணம் வங்கியில் எடுத்தாலோ அல்லது வங்கியில் முதலீடு செய்தாலோ உடனடியாக தெரிந்து விடும். வருமான வரி கட்டாமல் ஏமாற்ற முடியாது. முக்கியமாக கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் நடுத்தர மக்களுக்கு ஆதார் கார்டு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
ஸ்மார்ட் கார்டு
ரேஷன் கார்டுகளுக்கு பதில் புதிய மின்னணு அட்டை ‘ஸ்மார்ட் கார்டு‘ வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் முழுக்க முழுக்க ஆதார் எண் வாங்குவதற்காக பொதுமக்கள் வழங்கிய, புகைப்படம், கைரேகை, கண்விழி ரேகை ஆகியவற்றை மத்திய அரசிடம் பெற்று, அதன் அடிப்படையிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அட்ரஸ் மாறியிருந்தால்...
மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, செல்போன் என் அல்லது வேறு ஏதாவது திருத்தம் ஏற்பட்டால் அந்த மாற்றத்தை ஆன்லைன் (http://uidai.gov.in/updateyouraadhaardata.html) மூலம் அல்லது தபால் மூலம் எளிதில் திருத்த முடியும். ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்வது எப்படி? 1) ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2) மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3) டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும். ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக செல்போன் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும்போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். (இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
* ஆதார் கார்டு வெப்சைட்டை பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் செல்போன் வைத்திருக்க வேண்டும்.
* ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும்போது, அந்த வெப்சைட்டில் உங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒன்டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்யவில்லை என்றால் அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணை பதிவு செய்யவும். தற்போது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை செல்போன் எண்ணை தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டை தபால் மூலம்தான் அனுப்பி வைக்க முடியும்.
* ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* எந்தெந்த குறிப்புகளை அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* தேர்ந்தெடுத்த குறிப்புகளை ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
* அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதி சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந் தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
* பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதி சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
* பிறந்த தேதியை அப்டேட் செய்யும்போது அதற்கான உறுதி சான்றிதழையும் அப்லோட் செய்ய வேண்டும்.
* முகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரிக்கான உறுதி சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
* தேவையான உறுதி சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
ஆதார் அட்டையால் என்ன பயன்?
எலக்ட்ரானிக் அடையாள அட்டையான ஆதார் கார்டு வழங்கும் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தியது. 12 இலக்கங்களை கொண்டிக்கும் ஆதார் அட்டை எண்ணில் அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். அவரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சமையல் காஸ் இணைப்பு எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என அனைத்து விவரங்களுக்கும் இடம் பெற்றிருக்கும்.
எனவே ஆதார் அடையாள அட்டை, முதல்கட்டமாக மானிய திட்டத்தை பெறுவதற்கு கட்டாயம் தேவை என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. போக போக சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற நிலையை மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை கட்டாயப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எவ்வளவு ஆதார்?
தமிழகம் முழுவதும் சுமார் 5 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இது 77.06 சதவீதம் ஆகும். மீதமுள்ள 33 சதவீதம் பேரும் விரைவில் ஆதார் எண் பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மத்திய அரசு, தற்போது மார்ச் மாதம் வரை மட்டுமே சிறப்பு முகாம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த முகாம் வருகிற நவம்பர் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை ஆணையர் கூறினார்.
அமலாக்க குழுவின் முதல் கூட்டம்
சமையல் எரிவாயு, வாக்காளர் அடையாள அட்டையை தொடர்ந்து ஆதார் எண் மூலம் அரசின் பிற சேவைகளை வழங்குவது குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. ஆதார் அட்டை சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் மாநில அளவிலான ஆலோசனை குழு கலைக்கப்பட்டு, புதிய அமைப்பு கடந்த மாதம் 25ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு தனித்துவ அடையாள அமலாக்க குழு என பெயரிடப்பட்டது. இந்நிலையில், தனித்துவ அடையாள அமலாக்க குழுவின் முதல் கூட்டம், அதன் தலைவர் தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, உள்துறை, வருவாய்த்துறை, நிதித்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய தகவல் மையத்தின் இணை இயக்குனர், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணை இயக்குனர் ஆகிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது பற்றியும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஆதார் எண் மூலம் அரசின் பிற சேவைகளை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுமுறை நாட்களில்
தமிழகம் முழுவதும் சுமார் 500 முகாம்கள் ஆதார் அட்டை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படுகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் விடுமுறை தினங்களை பயன்படுத்தி ஆதார் எடுத்துக் கொள்ளலாம்.




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive