பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

         பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


             'கத்தி முனையை விட பேனா முனை வலுவானது' என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் மனநிறைவோடும், மனஅமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் இந்த அரசு தனி அக்கறை கொண்டுள்ளது.அதன் அடிப்படையில் தான் கடந்த 2011-ஆம் ஆண்டில் இவ்வரசு பொறுப்பேற்ற பின்பு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம், 14.9.2011 முதல் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், 7.10.2013 முதல் 6,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல் மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, குடும்ப மாதாந்திர ஓய்வூதியம் 14.9.2011 முதல் 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், 7.10.2013 முதல் 3,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இன்றைய வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர் நலன் கருதி, அவர்களது ஓய்வு காலம் குறித்து ஓர் நம்பிக்கையும், இன்றைய வாழ்வின் மீது ஒரு பிடிப்பும் ஏற்படும் வகையில் இந்த ஓய்வூதியங்களை மேலும் உயர்த்தி வழங்க நான் முடிவெடுத்துள்ளேன்.இதன்படி, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதைப் போல, மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 4,500 ரூபாயிலிருந்து 4,750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு 110-வது விதியின் கீழ் வாசிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive