Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு - ரஷ்யா சென்றடைந்தார்

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-


           நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8-ம் வகுப்பிலும், சர்மிளா 6-ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய இவர் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.

சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்புகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவார். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இந்த ஆண்டு, அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வானார்.

இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார். இதற்கிடையே அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்து புறப்பட்ட கார்த்திகா நேற்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறியதாவது:-

நான் சங்கரன்கோவிலில் 4-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தோம். பின்னர் நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார்.

எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருளால்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஏனெனில் நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். என்னை போலவே வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு மாணவி கார்த்திகா தெரிவித்தார்.

இவருடைய தங்கை சர்மிளா தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 488 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive