எம்.பி.பி.எஸ்.
மற்றும் பி.டி.எஸ்., கால்நடை அறிவியல் படிப்பிற்கான அகில இந்திய
ஒதுக்கீட்டுக்காகவும்,
ஆயுஷ் படிப்பிற்காகவும் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்வோருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதிலும் இந்த தேர்வை நேற்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தியது.
ஆயுஷ் படிப்பிற்காகவும் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்வோருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதிலும் இந்த தேர்வை நேற்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தியது.
தமிழ், ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. விருப்பப்பட்ட மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் தமிழக மாணவர்கள் ஆவர். தமிழகத்தில் 170 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 82 ஆயிரத்து 272 பேர் ‘நீட்’ தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 25 ஆயிரத்து 208 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் அந்த மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். அந்த மாணவர்கள் வேறு வழியின்றி ரெயில்களிலும், பஸ்களிலும் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. என்றாலும் காலை 7.30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும், சோதனைகள் முடிந்தபின்பு காலை 9.30 மணிக்கு தேர்வு எழுத தயாராக இருக்கவேண்டும், அதன்பிறகு தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது.
இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்கள் முன்பாக காலை 7 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தேர்வு மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் போலீசார் நுழைவுவாயில் முன்பு நின்று மாணவ, மாணவிகளை சோதனையிட்டு மெட்டல் டிடெக்டர் கருவி வழியாக அனுப்பினர். ஏற்கனவே அறிவித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி பலர் தேர்வு மையத்துக்கு வந்தனர். கம்மல், மூக்குத்தி, கொலுசு, சங்கிலி அணிந்து வந்த மாணவிகளை அவற்றை கழற்ற அறிவுறுத்தினர். சில மாணவிகள் தாங்களாகவே அகற்றி பெற்றோரிடம் கொடுத்தனர்.
சில மாணவிகளின் பெற்றோர் தங்களது மகள்கள் அணிந்திருந்த கம்மல், சங்கிலியை கழற்றி வைத்துக்கொண்டனர். மாணவிகள் தலைமுடியில் கட்டியிருந்த ரப்பர் பேண்ட், கிளிப்புகளை அகற்றி தலைவிரிகோலத்துடன் தேர்வு மையத்திற்குள் சென்றதை பார்த்து பெற்றோர் வேதனையுடன் மனம் குமுறினர்.
துப்பட்டா அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் சில மாணவிகள் சுடிதாருடன் துப்பட்டா அணிந்து வந்தபோது அவற்றை கழற்றும்படி கூறினர். இதனாலும் பெற்றோர் வேதனை அடைந்தனர்.
நுழைவுவாயிலில் மாணவ- மாணவிகளின் நுழைவுச்சீட்டை சோதனையிடப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் சென்றபோது அவர்களுக்கு பெற்றோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பினர். நீட் தேர்வுக்கான இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் மாணவிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல மாணவர்களுக்கும் முழுக்கை சட்டை, டி.சர்ட், செயின், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து வரக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் இவற்றை அணிந்து வந்த மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
மாணவர்கள் சிலர் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர். அதை கழற்றிய மாணவர்கள், உறவினர்களிடம் இருந்து அரைக்கை சட்டையை வாங்கி அணிந்து கொண்டனர். ஒரு சிலர் முழுக்கை சட்டையை கத்திரி, பிளேடால் வெட்டி அரைக்கையாக மாற்றிக்கொண்டனர். மாணவர்கள் கைகளில் அணிந்திருந்த கயிறு, கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலைகள் ஆகியவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்.
கூலிங்கிளாஸ், ஷூ, கைப்பை, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செல்போன், கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ் போன்ற எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் கொண்டுவரக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இவற்றை எடுத்து வந்தவர்களும் அவதிக்கு உள்ளாயினர்.
விதிமுறைகள் அனைத்தும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தும், தேர்வு மையங்களுக்கு சில மாணவர்கள் காலதாமதமாக வந்தனர். அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதமுடியாத சோகத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். தங்களின் டாக்டர் கனவு தகர்ந்து போனதாக கவலை தெரிவித்தனர்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி தேர்வு மையத்துக்கு கேரளாவை சேர்ந்த அஹியா எனும் மாணவி தேர்வு எழுத காலதாமதமாக வந்தார். இதனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து கண்ணீர்விட்டு அழுத அந்த மாணவிக்கு ஆதரவாக அவரது பெற்றோர் மற்றும் பள்ளியின் வாசலில் காத்திருந்த பெற்றோரும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் பள்ளிக்கு முன்பாகவே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சோகத்துடன் புறப்பட்டு சென்றார்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 5 சதவீதம் பேர் மட்டுமே நேற்று தேர்வை எழுதவில்லை. அந்த வகையில் நேற்று தமிழகத்தை சேர்ந்த 1 லட்சத்து 2 ஆயிரத்து 106 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...