10,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்!
அமெரிக்க இடைத்தேர்தல் குறித்து, ட்விட்டரில் தவறான தகவல்களை வெளியிட்ட 10,000 கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் பல்வேறு கணக்குகள் தேர்தல் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதாகப் புகார் எழுந்தது. இவை அனைத்தும், ஜனநாயகக் கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தாங்கியிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து, அக்கட்சி ட்விட்டர் நிர்வாகத்துக்குப் புகார் அளித்தது.

இதன் அடிப்படையில், தங்களது தளத்தில் இருந்து 10,000க்கும் அதிகமான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை நீக்கியுள்ளது அந்நிறுவனம். இது குறித்துத் தகவல் வெளியிட்ட ட்விட்டர் அதிகாரி ஒருவர், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இது நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார். இந்த கணக்குகளில், தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதுபோல கருத்துகள் அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், 10,000 ட்விட்டர் கணக்குகளை நீக்கியது பெரிய விஷயமில்லை என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் நிலவி வருகிறது. 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பல லட்சத்துக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டன. அப்போது, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அக்கட்சியின் இதர வேட்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரம் ட்விட்டரில் எழுந்ததாகக் கூறப்பட்டது. தற்போதும் அத்தகைய நிலை நிலவியதாலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் 1 கோடிக்கும் அதிகமான ட்வீட்டுகள் அமெரிக்க இடைத்தேர்தலைக் குறித்து அமைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15,000 பயனாளர்கள் தங்களது பெயருடன் ’வாக்கு’ (vote) எனும் வார்த்தையையும் சேர்த்தே பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகியான பிரிகெட் கொய்னே. கடந்த சில மாதங்களாகவே, தேர்தல் குறித்த அவதூறான கருத்துகளைப் பரப்பாமல் இருக்கத் தங்களது நிறுவனம் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments