ஜாக்டோ-ஜியோவுக்கு அரசு அழைப்பு :இன்று மதியம் பேச்சுவார்த்தை

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் டிசம்பர் 4ம் தேதி தொடர் வேலை நிறுத்தம் நடக்க உள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பளம் தொடர்பான பிரச்னைகள் மீது கடந்த 7 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்ற ஒருங்கிணைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பின் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து முதல்வருடன் ஈரோட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. 

                ஜாக்டோ-ஜியோ தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் தனிநபர்  சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரையை குறிப்பிட்ட காலத்தில் வெளியிடுவதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருநபர் குழு பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ சார்பில் தீர்வு காணும் வரை போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்து, டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என அறிவித்தனர். இதை முடக்க அரசு தரப்பில் பல முயற்சிகள் செய்தும் போராட்டம் நடத்துவதில் ஜாக்டோ-ஜியோ உறுதியாக உள்ளது. 

            இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு நேற்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சு நடக்கிறது. இதுகுறித்து, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:பல காலமாக போராட்டம் நடத்திய நிலையில் நேற்று முன்தினம் ஒருநபர் குழு தனது அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எங்களுக்கு தெரியாது. இந்நிலையில், நாளை (இன்று) பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு பணியாளர் சீர்திருத்தத்துறை செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடக்கும் என்று தகவல்  வந்துள்ளது. மற்ற அதிகாரிகள் யார் யார் பங்கேற்கின்றனர் என்ற தகவல் தெரியவில்லை. 

         இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ-ஜியோவில் உள்ள 20 ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளோம். அப்போது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,இழப்பை வழங்க வேண்டும், அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்கு பிறகு, 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், சத்துணவுப் பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், எதிர்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்ற அரசாணை 56ஐ  ரத்து செய்ய வேண்டும், 2003-04ம் ஆண்டில் தொகுப்பு ஊதியத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்ற 7 கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this