Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

110 கி.மீ. வேகத்தில் தமிழகத்தில் கோரதாண்டம் ஆடிய கஜா புயல்!



*உருக்குலைந்தது நாகை மாவட்டம்
* நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிப்பு
* பல பகுதிகளில் வீடுகள் தரைமட்டம்
* மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன
* தமிழகத்தை மிரட்டுகிறது புதிய புயல்

நாகை: வங்கக் கடலில் உருவான கஜா’ புயல் நாகையில் கரையை கடந்தது. 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் கஜா கோரதாண்டவம் ஆடியது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்களும், லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன.  வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 நாட்களுக்கு முன் புயலாக மாறியது. இதற்கு `கஜா’ என்று பெயரிடப்பட்டது. கடலில் மெல்ல நகர்ந்து வந்த கஜா புயல் நாகை அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நாகை துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது புயலின் அதிகபட்ச ஆபத்தை குறிப்பதாகும். இரவு 8 மணியில் இருந்து லேசான காற்று மழையுடன் புயல் தாக்குதல் தொடங்கியது. இரவு 11.30 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டபோதும் அது மெதுவாகவே கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. நேற்று அதிகாலை 12.01 மணிக்கு பயங்கர சூறாவளி காற்றுடன் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. அதிகாலை 2.30 மணி வரை நாகை - வேதாரண்யம் இடையே புயலின் கண் பகுதி கரையை கடக்க ெதாடங்கியது.

அப்போது, காற்றின் வேகம் 110 கிலோ மீட்டரில் வீசியது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் இரவு 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. புயல் கரையை கடந்தபோது கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள், ெசல்போன் டவர்கள் சாய்ந்தன.  இந்த பகுதிகளில் சுமார் 21 ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்துள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் காற்று பலமாக வீசியது. இதனால்,  மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், மரங்களும் அடியோடு சாய்ந்தன. மின்சாரம் இல்லாததால்தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து வெளியூர்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கஜாவின் தாக்குதல் அருகில் உள்ள தஞ்சை, புதுகை, அரியலூர், திருச்சி மாவட்டங்களுக்கும் நீடித்தது. இந்த மாவட்டங்களிலும் விடிய விடிய பேய் காற்றுடன் மழை கொட்டியது. ஒருசில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தது.  நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, கோடியக்காடு, வெள்ளப்பள்ளம், கீழ்வேளூர், நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருவையாறு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், புதுகை மாவட்டம் அறந்தாங்கி, கறம்பக்குடி, அம்புவயல், பிலாவிடுதி ஆகிய பகுதிகளில், பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

 புயல் காரணமாக நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் கடல் நீரும், மழை நீரும் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புயல் பாதிக்கும் என கண்டறியப்பட்ட கடலோர மாவட்டங்களில் 900 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாம்களில் 90 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.  நாகை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள், பல்லாயிரம் மரங்கள், செல்போன் டவர்கள், கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.01 மணிக்கு தீவிர புயலாக கரையை தொட்ட கஜா புயல், நேற்று அதிகாலை 2.30 மணி வரை கோரதாண்டவமாடி அதிகாலை 6.30 மணிக்கு வலுவிழந்தது. நாகையில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. காற்றில் கூரைகள் அடித்து செல்லப்பட்டதால் வீடுகளில் மழை நீர் புகுந்து வீடுகளும் ெவள்ளத்தில் மிதந்தது.

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த தென்னந்தோப்புகள் சேதமானது. இவற்றில் 1 லட்சம் தென்னைமரங்கள் சாய்ந்தது.  காரைக்கால்: காரைக்காலில்  நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று  காலை வரை மழையும் காற்றும் சேர்ந்து தாக்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில்  உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. 37 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர்  வெளியேற்றப்பட்டு 70 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மரங்கள், 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்ததால்  போக்குவரத்து முடங்கியது.  தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு டூவீலர் கூட  செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து  கிடக்கிறது.

கடலூரில் 60 கி.மீ. வேகம்: கடலூர் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் கனமழையுடன் 60 கி.மீ வேகத்தில் புயல் காற்று சுழன்றடித்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். நேற்று முன்தினம் மழை பெய்யத் தொடங்கி அதிகாலை 3 மணி வரை நீடித்தது. புயலினால் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.  மலைச்சாலைகளில் மண் சரிவு: திண்டுக்கல் மாவட்டத்தில் 60 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கொடைக்கானல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதன்காரணமாக கொடைக்கானல் - பழநி சாலை, கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் ஏராளமான மரங்கள் முறிந்தும், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் 2 மலைச்சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 கொடைக்கானல் மச்சூர் அருகே அரசு பஸ் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 50பயணிகள் உயிர் தப்பினர். மன்னவனூரில் பாலத்துக்காக தோண்டப்பட்ட வாய்க்காலில் சிக்கிய பஸ்சை சுமார் 3 மணி நேரத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.   இதேபோல் கொடைக்கானல் சிவனடி சாலை, அண்ணா சாலை, ஏரிச்சாலை, அப்பர்லேக் சாலை, சாய்பாபா பங்களா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் கொடைக்கானல் நகர் பகுதியில் நாள் முழுவதும் மின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த புயல் காரணமாக நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை, புயல் பாதிப்புக்கு வீடி இடிந்தும் மின்சாரம் தாக்கியும் 51 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அரபிக்கடலுக்கு சென்றது: கஜா புயல் நாகை -  வேதாரண்யம் இடையே கரையை கடந்து விட்டது. என்றாலும், ராமநாதபுரம்  மாவட்டம், பாம்பன், ராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை கடந்து திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கேரளா வழியாக  படிப்படியாக அரபிக்கடலுக்கு கடந்து சென்றது. சென்ற வழியெங்கும் சூறாவளி காற்றுடன் மழையும் கொட்டியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
புதுவை முதல்வர் பார்வையிட்டார்: காரைக்காலில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் நேற்று காரைக்கால் வந்து புயல் சேதங்களை பார்வையிட்டனர். புதுச்சேரியில் கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இதனால், கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாஸில் இருந்து புறப்பட்டு கொக்கு பார்க், தாவரவியல் பூங்கா அருகிலுள்ள உப்பனாறு கால்வாய், சின்ன வாய்க்கால் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.

கஜா புயல் கரையை கடந்து அரபிக் கடலுக்கு போய்விட்ட நிலையில் அடுத்த  கட்டமாக வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகும். இது புயல் சின்னமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்,  19ம் தேதி முதல் சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக இறந்தவர்கள் விவரம்
கஜா புயலின் தாக்குதலால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் மரம் விழுந்தும் 51 பேர் பலியானார்கள். மாவட்ட வாரியாக உயிரிழந்தவர்கள்:

நூற்றுக்கணக்கான படகுகள் சேதம்
நாகை உள்ளிட்ட பல மாவட்ட மீனவர்கள் 4 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. படகுகளை துறைமுகங்களிலும், முகத்துவாரங்களிலும் பாதுகாப்பாக நங்கூரம் போட்டும் கயிறுகட்டி நிறுத்தியும் இருந்தனர். இந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நூற்றுக்கணக்கான படகுகள் உடைந்து நீரில் மூழ்கியது.

சேத விவரம் கணக்கீடு
நாகை மாவட்டத்துக்கான புயல் நிவாரண பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி ஜவஹர் புயல் பாதிப்பு குறித்து கூறும்போது, ``புயல் நாகையை கடந்து விட்டது. சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. இப்போது சேத விவரங்களை சரியாக கூற முடியாது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பிலும் சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஏராளமான மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை நிறுவி மின் இணைப்பு கொடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 2 நாளில் அந்த பணி முழுமை பெறும். இந்த பணியில் அனைத்து துறையினரும் முடுக்கி விடப்பட்டு உள்ளனர்’’ என்றார்.

கரை தட்டிய கப்பல்
காரைக்கால் துறைமுகத்தில் மணல் தூர்வாரும் பணிக்கு தனியார் கப்பல் 2 தினங்களுக்கு முன் காரைக்கால் வந்தது. நேற்று புயல் நாகை அருகே கரையை கடக்க போகிறது என்பதால் அந்த கப்பல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டது. ஆனாலும் பலத்த ஆக்ரோஷத்துடன் இரவு கரையை நோக்கி வந்த கஜா புயலில் அந்த கப்பல் அடித்து வரப்பட்டு தமிழக எல்லையான ேமலவாஞ்சூர் அருகே தரை தட்டி நின்றது.  அந்த கப்பலில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது.

2 விமானங்கள்
திரும்பி சென்றன
சார்ஜாவில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு திருச்சி வந்த விமானத்தை, புயல் காரணமாக தரையிறங்க வேண்டாம் என்றும் கொச்சிக்கு செல்லுமாறு விமான நிலைய  கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் திருச்சியில் தரையிறங்காமல் கொச்சிக்கு சென்றது. இதுபோல  சென்னையில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு திருச்சி வந்த இண்டிகோ  விமானம் தரையிறங்காமல் 5 முறை வட்டமடித்த பின்னர் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி சென்றது.

அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்தில் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். புயல் காரணமாக பொம்மையார்பாளையம் பகுதி கடற்கரையோரம் இருந்த செல்வகுமார், ராமலிங்கம், தூரடி, பாபு உள்ளிட்ட 23 பேரின் வீடுகள், கடந்த 2 ஆண்டில் கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதுபற்றி, வருவாய் துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விழுப்புரம் மாவட்ட சிறப்பு அதிகாரி பழனிசாமி, வானூர் தாசில்தார் ஜோதிவேல், கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் சென்று கடல் அரிப்பை பார்வையிட்டனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இப்பகுதியில் 13 ஆண்டுகளாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எங்களை கண்டுகொள்வதில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பேசிய சிறப்பு அதிகாரி உங்கள் கிராமத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive