வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மற்றும் பெருமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில், தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், இப்பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரான பாலச்சந்திரன், இன்று (நவம்பர் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் பெருமழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பொழிந்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பதிவானது. “சென்னையில் மேகமூட்டம் காணப்படுவதோடு அவ்வப்போது மழை பொழியவும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். தமிழகக் கடற்கரையின் தென்மேற்கு பகுதிகளிலும், மன்னார் வளைகுடாவிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...