போலி மாற்றுச்சான்றிதழ் ரூ.50,000க்கு விற்கப்பட்ட புகார் : பள்ளி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

போலி மாற்றுச் சான்றிதழ் தயாரித்துக்கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பத்தியாவரம் சூசையப்பர் நகரில் அரசு நிதியுதவி பெறும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்குப் பயின்ற விக்னேஷ் என்ற மாணவர் தனது மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் விக்னேஷின் சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு விக்னேஷ் என்ற பெயரிலேயே ரூ.50,000க்கு விற்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் பள்ளியில் திடீர் சோதனை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் உட்படப் பள்ளி ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலியாக மாற்றுச் சான்றிதழ் தயாரித்துக்கொடுத்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளியின் கணினி உதவியாளர் தேவன், பதிவரை எழுத்தர் இருதயராஜ் மற்றும் அலுவலக உதவியாளர் நஷரத் ராஜ் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் ஜெயகுமார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மற்றும் இரவு காவலாளிக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளியின் கணினி உதவியாளர் தேவனை நிரந்தர பணிநீக்கம் செய்வது தொடர்பாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜெயகுமார், போலிச் சான்றிதழ் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

Share this