NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert

`உங்களுடைய வேலிடிட்டி
XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ்
செய்யவும்" - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!


மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், ``உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், ``உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்" என்றனர். 
``இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்... இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்..." என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்" என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. 
இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது.
அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் நிறுத்தப்படுவது தொடர்பாக வரும் மெசேஜ்


இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். 
இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.
ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. 
இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. 
ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.

ஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். 
இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. 
ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும்.
இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.
அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. 
இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். 
உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.
ஜியோ
அந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். 
அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம்.
மேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. 
நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், 84 நாள்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.
ஏர்டெல்
இந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. 
இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது?
ஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. 
அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே  ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive