இனி புத்தகப்பைக்கு ஒரு ரூல்ஸ்! வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ்!! - மத்திய அரசு

மாணவர்களின் புத்தகப் பை எவ்வளவு எடை இருக்க வேண்டும், எந்த வகுப்பினருக்கு வீட்டுப்பாடம் கொடுக்கலாம் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பொது மூட்டையாக இருப்பது புத்தகப்பை. மாணவர்கள் தங்களது உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கற்பிக்கப்படும் பாடங்கள், புத்தகப் பையின் எடை ஆகியவை அரசின் அறிவுறுத்தல்படி இருப்பதை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிகளை உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை ஒன்றரை கிலோதான் இருக்க வேண்டும். 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை நான்கரை கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது' என குறிப்பிட்டுள்ளது. மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி, 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. அதேபோன்று 3 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுதக்கொடுக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Share this