பழங்கால கட்டடக் கலை நுணுக்கங்களின் அழகை நாம் கோயில்களில் மட்டுமே கண்டு ரசித்திருப்போம். ஆனால் தங்களது ஆசிரியரின் கைவண்ணத்தில் அழகழகான கலை நய படைப்புக்களை பார்த்து ரசிப்பதுடன் அதனை சுவாரஸ்யமாக கற்றும், அதுகுறித்து திறன்களை வளர்த்தும் வருகின்றனர் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். இவர்களுக்கு பல்திறன் ஓவிய, சிற்ப கலைத்திறன்களை கற்பித்து கவனம் ஈர்த்து வருகிறார் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பாலமுருகன், 40. பள்ளியில் 81 மாணவர்கள், 66 மாணவிகள், தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்கள், கூடுதல் ஆசிரியர் இருவர் என கற்பித்தல் பணி திறன்பட நடக்கும் வேலையில், ஆசிரியர் பாலமுருகனின் திறமைகளால் மாவட்டத்திற்கே முன்னோடி கலைத்திறன் வாய்ந்த பள்ளியாக 'சிறப்பு அந்தஸ்து' கிடைத்துள்ளது.பள்ளியில் நடக்கும் ஆண்டுவிழா, பெற்றோர் ஆசிரியர் கூட்டம், சுதந்திரதினம், குடியரசு தினம், தலைவர்களின் பிறந்ததினம், அறிவியல் மாநாடு என அனைத்து நிகழ்ச்சியிலும் பாலமுருகனின் கலைப் படைப்புக்கள் நிச்சயம் இடம் பெறும். 'சிற்பக் கலைஞரா, கலை இயக்குனரா' என்று சொல்லும் அளவிற்கு திறமைகள் அபாரமாக அவரிடம் உள்ளன.
அவர் கூறியதாவது: முதன்முதலில் மதுரை பசுமலையில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் 'ப்ரி கேன்ட் அண்ட் அவுட்லைன் ஓவியம்' குறித்த பயிற்சி பெற்றேன். பின் கல்வியியலில் டிப்ளமோ முடித்தேன். 2007 முதல் 2011 வரை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியல் பணிபுரிந்து, 2012 மார்ச் முதல் பள்ளியில் சேர்ந்து பணியை தொடர்கிறேன். நிழல் படைப்பு, வாட்டர் கலர், வடிவ காகித வண்ணங்கள், கோலப்பொடி வண்ண காகிதங்கள், ஸ்டோன் எக்ஸ்ட்ராக்ட், ஸ்டிக்கர் பொட்டு எக்ஸ்ட்ராக்ட் வடிவங்களில் வரைகலையை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறேன். அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான செண்டை மேளம், லிங்கம், வீணை, அரண்மனைத் துாண்கள், கோமாதா, யாக வேள்வி குண்டங்கள், விநாயகர் சிலைகள் என 'தெர்மாகோல்' பொருட்களை கொண்டு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி பங்கேற்க வைப்பேன். நிகழ்ச்சி உயிர்ப்பாக மாறி, பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவர். மேலும் 'நியு வுட்' கொண்டு தோரணவாயில், கோயில் கோபுரங்களை செய்து எங்கள் பள்ளிக்கும் மட்டுமில்லாது, பிற அரசு பள்ளி விழாக்களின் பயன்பாட்டிற்காகவும் அனுப்புகிறோம். மாணவர்களிடம் உள்ள திறன்களை வளர்க்க மெழுகுவர்த்தியில் உருவங்களை செதுக்குவது, களிமண்ணால் தலைவர்களின் உருவங்களை செதுக்குவது குறித்து கற்றுத்தருகிறேன்.. பள்ளிக்கல்வித்துறை சார்பில், நாமக்கல்லில் நடந்த வண்ணக்கோலம் போட்டியிலும், சமூக நாடகம் என்ற தலைப்பில் திருநங்கைகள் படும் பாடு என்ற தலைப்பிலும் நாடகம் நடத்தி பரிசுகள், கோப்பை பள்ளி சார்பில் பெற்று வந்தேன். தேனி திண்ணை அமைப்பு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் ஜான்சன், சக ஆசிரியர்கள் தந்த ஊக்கம்தான் இந்த சாதனை சாத்தியமானது, என்றார்.மாணவர்களிடம் நல்ல பழக்கங்களை குறிப்பாக நகங்களை வெட்ட வேண்டும், முடி வெட்டாமல் இருக்கக்கூடாது என கண்டிப்பும் காட்டி ஆக்கப்பூர்வமாக நல்ல நுால்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். நியு வுட் 'மெட்டீரியல்கள் மூலம் கோயில் கோபுரங்கள், காலணி வைக்கும் 'ஸ்டாண்ட்'களை சொந்தப்பணத்தில் செய்து மாணவர்களுக்கு வழங்கி வருவது அவரின் கூடுதல் சிறப்பு.
தொடர்புக்கு 88836 63570

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments