மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தல்!20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படிப்பட்ட அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை என்று தினகரன் தரப்பு தெரிவித்துவிட்டது.
இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுடனேயே இடைத் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்தச் சூழ்நிலையில் தனியார் ஊடகங்களுக்கு நேற்று (நவம்பர் 19) பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், “திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் புயலின் காரணமாக இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால், புயல் வந்திருக்கும் இந்த நேரத்தில்தான் தேர்தல் நடந்திருக்கும். இதன் மூலம் பல சிரமங்களைத் தவிர்த்துள்ளோம். திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால், நிச்சயமாகக் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்று தெரிவித்த ராவத், “தொகுதி காலியான அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு தொடர்பாக யாரும் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே 20 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத் தேர்தல் நடத்தப்படும்” என்றும் கூறினார்.

Share this

1 Response to "மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தல்! "

  1. Waste of money by conducting byelection before mp election..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...