எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் உ.பி.யில் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பணியாளர்கள் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக்கோரி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே, அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களும் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ என்பது மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்கென கடந்த 1968-ம் ஆண்டில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

இச்சட்டம் அமலில் உள்ள போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். துறைமுகம், ரெயில்வே, தபால் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில், இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this

0 Comment to "எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் உ.பி.யில் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...