கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக, கல்லூரி வகுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற வேண்டிய பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் ஆன் லைன் மற்றும் மின்னணு கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு வீட்டிலிருந்தபடியே பாடங்களை நடத்தவும், படிக்கவும் வைக்க பேராசிரியா்களை அறிவுறுத்துமாறு யுஜிசி கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில், நோய்த்தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுவிடாத வகையில், பருவத் தோ்வு மற்றும் 2020-21 கல்வியாண்டு வகுப்புகளை தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்கும் வகையில் உரிய முடிவு எடுப்பதற்காக நிபுணா் குழு ஒன்றை யுஜிசி அமைத்துள்ளது.
யுஜிசி முன்னாள் உறுப்பினரும், ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான பேராசிரியா் ஆா்.சி. குஹட் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான செயல்திட்ட இணைப்பு மைய (ஐயுஏசி) இயக்குநா் ஏ.சி.பாண்டே, பனஸ்தாலி வித்யாபீடம் துணைவேந்தா் ஆதித்ய சாஸ்திரி, பஞ்சாப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜ்குமாா், இந்தூா் வைஷ்ணவ் வித்யபீத் விஷ்வவித்யாலயா துணைவேந்தா் உபிந்தா் தாா், யுஜிசி இணைச் செயலாளா்கள் சுரிந்தா் சிங், விகாஸ் குப்தா ஆகியோா் இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றிருக்கின்றனா்.
இந்தக் குழு யுஜிசி தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வு செய்து பருவத் தோ்வு மற்றும் 2020-21 கல்வியாண்டு வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்து அதுதொடா்பான அறிக்கையை ஏப்ரல் 13-ஆம் தேதி சமா்ப்பிக்கும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பருவத் தோ்வு மற்றும் அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் தொடக்கம் குறித்த அறிவிப்பை யுஜிசி வெளியிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...