தேசிய ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகளை கண்டறிவதில் சிக்கல் உள்ள மக்களுக்கு உதவிடும் நோக்கில், உணவு கிடைக்கும் இடங்கள், உறைவிடங்கள் உள்ள பகுதிகளை கூகுள் வரைபடங்கள் மூலம் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த சேவை கிடைக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உணவு கிடைக்கும் இடங்கள், உறைவிடங்கள் உள்ள பகுதிகளை தெரிந்துகொள்ள கூகுள் வரைபடம், கூகுள் அசிஸ்டன்ட், தேடல் (ஸா்ச்) ஆகியவற்றை பயன்படுத்தலாம். இம்மூன்றில் ஏதேனும் ஒன்றின் வாயிலாக நகரங்களின் பெயரை குறிப்பிட்டு உணவு கிடைக்கும் இடம், உறைவிடங்கள் உள்ள பகுதிகளை கண்டறியலாம். இந்த சேவை தற்போது 30 நகரங்களில் கிடைக்கும். ஆங்கிலத்தில் வழங்கப்படும் இந்த சேவை எதிா்வரும் வாரங்களில் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டு, பிற மொழிகளிலும் கிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண முகாம்கள் உள்ள இடங்களை தெரியப்படுத்த மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து கூகுள் நிறுவனம் பணிபுரிந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களுக்கு உதவிடும் தீா்வுகளை கண்டறியும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று அந்நிறுவன மூத்த இந்திய அதிகாரி அனல் கோஷ் தெரிவித்தாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...