PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா? கல்வியாளர்கள் கருத்து!

உலகம் முழுவதும் பள்ளிகளும் கல்வாரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன . இந்தியாவில் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் ஆன்லைன் வழியாக கற்பித்தல் பணிகள் தொடங்கிவிட்டன . நவீன தொழில்நுட்ப வசதிகளால் நகரங்கள் , பெருநகரங்களில் ஆன்லைன் கல்வி எளிதாகியிருக்கிறது . ஒருபக்கம் ஆன்லைன் கல்வி வளர்கிறது என்று பெருமையாகப் பேசினாலும் , மறுபுறம் சாதாரண போன் வசதிகூட இல்லாத கோடிக்கணக்கான மாணவர்களின் நிலையை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது . போக்குவரத்தும் இணைய வசதிகளுமற்ற ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி சாத்தியமா ? என்று கேள்வி எழுகிறது .

இதுகுறித்த கருத்துகளைப் பார்க்கலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர் , பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை.

பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரையில் அரசுக்கு முழு பொறுப்புள்ளது . பொதுப்பள்ளிகள் பற்றி விவாதிப்பதற்குக் கூட யாரும் தயாராகயில்லை . தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25 ஏழை மாணவர்களை அரசே சேர்த்திருக்கிறது . வீட்டில் அவர்களுக்கு ஆன்லைன் வசதி இருக்குமா ? வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அவர்கள் வருகிறார்கள் . பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜி சேர்ந்தவர்கள் இன்று எட்டாம் வகுப்பு படிப்பார்கள் . வீடுகளில் , அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களின் குழந்தைகளிடம் என்ன வசதிகள் இருக்கும் . இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் , வீடற்றவர்கள் , குடியமர்த்தப்பட்டவர்களின் குழந்தைகள் பற்றி நாம் யோசிக்கவில்லை . ஆன்லைன் கல்வி என்பது உயர்கல்வியில் சாத்தியமாகியுள்ளது . ஆனால் பள்ளிக்கல்வியில் நேரடி வகுப்புகளுக்கு இணையானதாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க முடியாது . பேரிடர் காலத்தில் வேண்டுமானால் பயன்படுத்தலாம் . தமிழகத்தில் பொதுப்பள்ளி முறைமையும் அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்ற நிலை வரும் போதுதான் அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும் . அதுவரையில் கற்றல் முறையில் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க முடியாது .

உமா அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்

சென்னை கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஆன்லைன் கல்வி முயற்சிகள் பள்ளிக் கல்வித்துறையில் தொடங்கப்பட்டன . இன்பர்மேஷன் டெக்னாலஜி ஷெல் ஒன்று செயல்பட்டது . கணினி வழிக் கல்வியின் அடிப்படைப் பயிற்சிகளை தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு வழங்கினோம் . 1500 ஆசிரியர்கள் கணினிப் பயிற்சி பெற்றனர் . அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து பயிற்சிகள் அளித்து வந்தோம் . ஆர்வமும் வரவேற்பும் ஆசிரியர்களிடம் அதிகமாக இருந்தது . சொந்தமாக லேப்டாப் , செல் போன்கள் வாங்கி மாணவர்களுக்குக் கற்பித்தார்கள் , மிகப்பெரிய மாற்றங்கள் நடந்தது உண்மைதான் . ஆனால் , அந்தப் பயிற்சிகள் நூறு சதவீதம் வெற்றிபெறவில்லை . பிளஸ் ஒன் , பிளஸ் டூ வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் லேப்கள் , வெர்ச்சுவல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன . ஆன்லைன் கல்வி என்ற தொலைதூர வெளிச்சத்தை அடைவதற்கு அடிப்படையாக கணினிவழி கற்றல் உள்ளது . அதற்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருந்தாலும் முழுமையாக அதை அடையமுடியவில்லை . . நம்மிடம் செல்போன் , கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் கூட நெட்வொர்க் வசதி அடிப்படைத் தேவையாக உள்ளது . உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் செல்போன் சிக்னலே கிடைக்காது . அங்கே ஆன்லைன் கல்வியை நாம் சாத்தியப்படுத்தும் நாளில் , தமிழகம் முழுவதும் அது வளர்ந்திருக்கலாம் . இந்திய அளவில் ஆன்லைன் கல்வி என்பது ஒரு மாயைதான் . இதனால் தாய்மொழி வழிக் கல்வி காணாமல் போகும் அபாயம் இருக்கிறது . பெரும்பாலும் அது ஆங்கில வழியாகத்தான் நடத்தப்படும் . எதிர் காலத்தில் இதுவொரு வணிகமாக மாறும் . ஒரு கல்விச் சேவையாக அதனைப் பார்க்கமுடியாது .
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group