விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் சாராத கற்றல் பயிற்சிகளை, பள்ளிகள் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, நேற்றுடன் ஒரு மாதம் முடிந்தது. பள்ளிகள் இல்லை என்பதால், பாடங்களை கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்ற மனநிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 'டிவி' நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட்டுகள் என, பொழுதை கழித்து வருகின்றனர்.
ஆனாலும், நாள் முழுதும் கேளிக்கைகள், விளையாட்டுகளில் பொழுதை கழிக்க முடியாது.மேலும், அனைத்து நேரங்களிலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இருந்தால், மாணவர்களின் தொடர் கற்றல் திறன் குறைய வாய்ப்புள்ளது. வரும் கல்வி ஆண்டில், புதிய பாட திட்ட பாடங்களை படிப்பதில், சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு வகுப்பு மாணவருக்கும் தினம் அல்லது வாரம் இரு முறை மேற்கொள்ள வேண்டிய, சில கற்றல் பயிற்சிகள் குறித்து, பள்ளிகள் தரப்பில், குறிப்புகளை வழங்கலாம்.
நேரடியாக பாடம் சார்ந்தவையாக இல்லாமல், பொது அறிவு குறித்த தலைப்புகள், வரலாற்று நிகழ்வுகள், கணக்கு வாய்ப்பாடு அட்டவணை, அபாகஸ் பயிற்சி, தவறின்றி ஆங்கிலம், தமிழில் எழுதும் பயிற்சி, பிழையின்றி பேசுவதுபோன்றவற்றை மாணவர்கள் பயிற்சி எடுக்கலாம். அதற்கு, பள்ளிகளில் இருந்து மொபைல்போன் வழியே வீட்டுப்பாடம் அனுப்புவதை போல், தற்போது குறிப்புகள் மற்றும் பயிற்சிகளின் தலைப்புகளை அனுப்பலாம்.அவற்றை பயன்படுத்தி, பிள்ளைகளுக்கு பாடம் சாராத பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...