++ அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர் 1-ல் அமலாகிறது. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
1603802406828

அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மாநில நிதியிலிருந்து புதுச்சேரி அரசு தொடங்குகிறது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலாகிறது.

புதுவையில் 3 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குத் தேர்வாகியுள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி செலுத்துகின்றன.

சிறிய மாநிலமான புதுவை மாநிலத்தில் அனைவருக்கும் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுத் தரப்பு, டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துக் கோரியது. ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளாததால் மாநில அரசு நிதியிலேயே அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி, சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆயுஷ்மான் திட்டப் பயனாளிகள் மற்றும் 25 ஆயிரம் அரசு ஊழியர் குடும்பங்கள் தவிர்த்து மீதமுள்ள 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் 100 சதவீத நிதியில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு தொகைக்கான மருத்துவம் பெற முடியும்" என்று தெரிவித்தனர்.

திட்டம் எப்போது அமலாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "மருத்துவக் காப்பீடு திட்டத்துக்குத் தேவையான நிதியும், சட்டத்துறை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது. புதன்கிழமை (அக். 28) இதற்கான டெண்டர் கோரப்படுகிறது. 21 நாட்களுக்குள் காப்பீடு நிறுவனத்தை முடிவு செய்வோம். டெண்டர் கோரும் நிறுவனம் பிரபல மருத்துவமனைகளுடன் சட்டபூர்வமான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இத்திட்டத்துக்குத் தனியாக அடையாள அட்டை கிடையாது. குடும்ப அட்டையையே அடையாள அட்டையாகப் பயன்படுத்த உள்ளோம். டிசம்பர் 1-ம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்" என்று குறிப்பிட்டார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...