நீட் தேர்வு முடிவுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் அக்.16-ம் தேதி வெளியாகின. இதில் மாநிலங்களில் இருந்து தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், நீட் தேர்வில் கலந்துகொண்டவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் சில மாநிலங்களின் விவரங்களில் தவறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஓஎம்ஆர் தாள்களில் தவறு நடந்திருப்பதாகக் கூறி, சில மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இதில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக என்டிஏ நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சில செய்தித் தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் என்டிஏ வெளியிட்ட நீட் தேர்வு முடிவுகள் தவறானவை என்று நேர்மையற்ற வகையில் செய்தி வெளியிட்டன. முழுமையான ஆய்வு மற்றும் கண்காணிப்புக்குப் பிறகே என்டிஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இவை அனைத்தும் சரியானவை என்று அனைத்துத் தேர்வர்களுக்கும் உறுதி அளிக்கப்படுகிறது.
எனினும் உண்மையாகவே நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம் இருந்தால் அது தொடர்பான முடிவுகள் தீர்த்து வைக்கப்படும். ஆனால் சித்தரிக்கப்பட்ட, போலியாக, இட்டுக்கட்டப்பட்ட தேர்வு முடிவுகளுக்கு எதிராக, சட்டத்துக்கு உட்பட்டு அவர்களின் விண்ணப்பத்தை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல தவறான வழிகளில் மருத்துவக்
கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருவதாக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிகளைப்
பெற்றோர்களும் மாணவர்களும் நம்ப வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள்'' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...