இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வுக்காக பயின்று வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் வசதிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயின்று வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2025 சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவு மூலமாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.25,000 நேரடியாக செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையை பெற, இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 21 (இன்று) முதல் ஜூலை 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...