பெற்றோர்களின் மொபைல்போன் எண்ணுக்கு மாற்றாக, மாணவர்கள் சிலர், அவர்களது எண்களையே ஆசிரியர்களிடம் அளிப்பதால், பள்ளி விபரங்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் வாயிலாக, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட சில பள்ளிகளில், மாணவர்களின் தனித்திறன், சுய ஒழுக்கம் போன்ற விபரங்களை பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில், வகுப்பு ஆசிரியர், தலைமையாசிரியரை உள்ளடக்கி வாட்ஸ்ஆப் குழுவும் ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக, பெற்றோர்களின் மொபைல்போன் எண்ணும் கோரப்படுகிறது. ஏதேனும் தகவல் இருந்தால், அதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சில மாணவர்கள், பெற்றோர்களின் எண்ணுக்கு மாற்றாக, அவரவரின் மொபைல்போன் எண்களை வாட்ஸ்ஆப் குழுக்கு அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கற்றல் திறனை பெற்றோருக்கு தெரிவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
சில பள்ளிகளில், ஒவ்வொரு வாரமும் கற்றல் திறனில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து, அறிந்து கொள்ளும் வகையில், பயிற்சி ஏடுகள் வாயிலாக தேர்வு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மாணவர்களின் கற்பித்தல் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது.
இதில், முன்னேற்றம் இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.
ஆனால், ஆசிரியர்கள் அளிக்கும் தகவல் பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்கவே, மாணவர்கள், இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். மாணவர்களை கண்டிக்கவும், பள்ளி விபரங்களை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தவும் முடிவதில்லை.
இவ்வாறு, கூறினர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...