மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை என்பார்கள். அதுபோல ஆசிரியர் பெருமக்களைச் சிறப்பாக வைத்து செய்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இரு தாள்களும் வெற்றிகரமாக அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் மத்தியில் இத்தேர்வுகள் குறித்து பல்வேறு வகையான அதிருப்தி நிலவி வருவதைக் காண முடிகிறது.
இதற்கு மிகவும் இன்றியமையாத காரணமாகக் கூறப்படுவது யாதெனில், இரண்டு தேர்விலும் கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமானவை என்பதாகும். இஃது ஒரு குற்றச்சாட்டாகவே உள்ளது. குறிப்பாக, இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் இந்த தேர்வில் தான் அதிகளவில் கூற்று, காரணம் சார்ந்த வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
அதாவது, ஒரு வினாவிற்கு மிகச் சரியாக இரண்டு விடைகளும் தெரிந்திருந்தால் தான் துல்லியமான முறையில் விடையளித்து தக்க மதிப்பெண் பெறவியலும். இதில் ஒன்று தெரியவில்லை என்றாலும் உரிய மதிப்பெண்ணை இழக்க நேரிடும். அதுபோன்று, பொருத்துக பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு வினாக்களுக்காவது சரியான விடை தெரிந்திருப்பது முக்கியம்.
பணியில் தொடர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்பது உலகிலேயே ஒரு விசித்திரமான தீர்ப்பாகும்.
இதுபோன்றதொரு ஊழியர் விரோத முடிவு என்பது வேறு எந்த துறையிலும் கிடையாது. குறிப்பாக, தொடக்கக்கல்வி நிலையிலும் இடைநிலைக் கல்வி நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி நிலையிலும் உள்ள ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் இந்த சமூகம் கிள்ளுக்கீரை போல் பாவித்து வருவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனையோர் அனைவரும் வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதர்களாக கருதுவதும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிப்பதும் என்பது ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதற்கு ஒப்பாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தொடக்கப்பள்ளிகள் முதற்கொண்டு மேனிலைப்பள்ளிகள் வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதிகளுடன் நியமனம் செய்யப்பட்டவர்களே ஆவார்கள். இதுதவிர, 1995 ஆம் ஆண்டிலேயே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனப் போட்டித் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தி ஆளெடுத்த வரலாறு ஈண்டு அறியத்தக்கது.
அதன்பின், 2004-2006 தொகுப்பூதியம் காலத்திலும் கூட, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறையே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களே ₹4000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் அவ்வக்கால ஆசிரியர் தகுதித் தேர்வு என்பதை நினைவில் கொள்வதே சாலச்சிறந்தது.
அதன்பின், 2012 இல் ஒற்றை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டு வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் விதிவிலக்காகப் பணி நியமனப் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது பலதரப்பட்ட எதிர்ப்புகளின் காரணமாகக் கைவிட்டுள்ளது நோக்கத்தக்கது. 1995, 2002, 2012 ஆகிய காலகட்டங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு ஆசிரியர் போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு என்று பெயர்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் என்பது ஒன்று தான் என்பதைப் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.
அதேபோல், 'அவரவர் காலகட்ட நியாயம் அவரவர்க்கு' என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. குறிப்பாக, கொம்பு முளைத்த ஆசிரியர் என்பவர் இங்கு ஒருவருமில்லை. வெறும் ஒற்றை தகுதித் தேர்வு எழுதி (அதுவும் பணி நியமனத்திற்கானது) அந்த வெற்றியையே பதவி உயர்வுக்கும் கருத வேண்டும் என்பது சரி என்று நீதிமன்ற வாசலில் நித்தமும் குடியிருப்போருக்கு ஒரு கேள்வி.
அன்றைய நியமனப் போட்டித் தேர்விலும் இன்றைய தகுதித் தேர்விலும் வெற்றி வாகை சூடியவர்களை விட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர்கள்? என்று சம்மந்தப்பட்டவர்கள் கேட்டால் அதற்கு பதில் இருக்க முடியாது.
இந்த நவீன உலகம் மனிதர்களை இழிபிறவிகள் ஆக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்லர். தமக்கான காலமும் நேரமும் வரும்வரை காத்திருக்க பதற்ற மனம் பொறுமையைக் கடைபிடிப்பதில்லை. மாறாக, எப்படியேனும் சகுனி வேலை புரிந்து 'ஓட்டைக்குள் சட்டம்; சட்டத்திற்குள் ஓட்டை' இருப்பதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லோரையும் ஏறி மிதித்து முதல் ஆளாகச் சென்று விட வேண்டும் என்கிற குரூர குறுக்குப் புத்தியில் இருப்பது யாருக்கும் நல்லதல்ல.
ஐம்பது வயதைக் கடந்த நல்லாசிரியர் பெருமக்கள் பலருக்கும் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்கிற உத்தரவு என்பது பெரும் மன உளைச்சலைத் தந்துவிட்டது உண்மை. மேலும், தம் பணி அனுபவத்திற்கு ஈடாகவோ அதற்கு குறைவாகவோ வயதுடைய சக ஆசிரியர்களின் ஏளனத்திற்கு எங்கே தாம் ஆட்பட்டு விடுவோமோ என்கிற பதற்றம் என்பது ஒரு மனிதத்தன்மையற்ற நிகழ்வாகும். இதில் பல்வேறு உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் வேறு.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி கட்டாயமாக எழுதித் தீர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலைவணங்கி எழுத விழைந்த ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் எத்தனையெத்தனை கடினப் பாடப்பகுதிகள்! கடந்த நவம்பர் 2025 இல் நடைபெற்ற எல்லோருக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு கடினமாக அண்மையில் ஜூலை 2026 இல் நடந்து முடிந்த தேர்வு இருந்ததாக எழும் பரவலான கருத்தை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. எளிய வகையில் இத்தேர்வு இருந்திருக்க வேண்டியதில்லை. அதேவேளையில் இவ்வளவு கடினம் இருக்க வேண்டுமா என்பது சிந்திக்கத் தக்கது.
பொதுவாகவே, தமிழ்நாட்டில் உரிய கல்வித்தகுதியுடன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியருக்குக் கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிர்ஷ்டவசமானது. சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு முதல் நாள் வரை பள்ளிப் பணியைச் செவ்வனே நிறைவேற்றி நேரடியாகத் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத வந்தவர்கள் பலர் ஆவார்கள். ஒரு மாத காலத்திற்கு மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. இவர்களுக்கு வேறெந்த சலுகைகளும் இத்தேர்வின் பொருட்டு வழங்கப்படவில்லை.
இச்சூழலில் அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் காணப்படுவது போன்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் குறைப்பு அல்லது கூடுதல் உயர்கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக ஐந்து மதிப்பெண்களும் மற்றும் பணியனுபவ காலத்திற்கு அதிகபட்சமாக பத்து மதிப்பெண்களும் மாநில அரசு கொள்கை முடிவெடுத்து வழங்குதல் என்பது சலுகை அல்ல, உரிமையாகும். இதன் அடிப்படையில் இத்தேர்வு சார்ந்த நீதிமன்ற வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு பல்வேறு மனக் குழப்பத்தில் தவிக்கும் ஆசிரியர் சமூகத்தை இந்த அரசு தாயுள்ளத்துடன் காக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
எழுத்தாளர் மணி கணேசன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...