Best NEET Coaching Centre

கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?

         ‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல. 
 
        2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.

                   மாணவர்கள் எளிதில் மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதிக மாணவர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலான பாடத்திட்டம்தான் மாணவர்களின் திறன் குறைவுக்கு முக்கியமான காரணம். பாடத்தைப் புரிந்துகொண்டு படிப்பது, கணிதத்தின் நான்கு முக்கிய அம்சங்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வது ஆகிய வற்றைவிட, தேர்ச்சி விகிதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு மாணவரால் இரண்டாம் வகுப்பு மாணவரின் பாடங் களை எளிதாகப் படிக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முக்கால்வாசிப் பேருக்குச் சாதாரண கழித்தல் கணக்கு தெரியவில்லை. இந்த மாணவர்கள் மேல் வகுப்புகளுக்குப் போன பிறகு இந்தத் திறன் அதிகரிப்பது ஓரளவுக்குத்தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது என்பது நமது கல்வி முறையின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
577 மாவட்டங்களில் 5,70,000 மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்று ஏ.எஸ்.ஈ.ஆரின் அறிக்கை தயாரிக்கப்பட்டி ருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில் 96% வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.
மாணவர்களின் திறன் குறைவுக்குப் பாடத்திட்டங்களும் பயிற்று விப்பு முறைகளுமே முக்கியமான காரணங்கள். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படும் கணிதம் என்பது எண்களைப் பற்றியதும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களும்தான். அது இப்போது 9, 10-வது வகுப்பு பாடங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்களுக்காக இதர மாணவர் களுக்குக் கணிதப் பாடங்களைக் கடினமாக்குவதால் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்விச்சுமைதான் கூடும்.
ஒரு ஆசிரியர் 30 மாணவர்களுக்கு மட்டுமே பாடம் சொல்லித் தரும் வகையில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் இருக்க வேண்டும். அதை அடைவதற்கு வகுப்பறைகளும் ஆசிரியர் களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். பள்ளிக் கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்புவது வீண் என்று பெற்றோர்கள் நினைத்த காலம் போய், தான் எந்த வகையில் துயரப்பட்டாலும் சரி, தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற உணர்வு பெற்றோருக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், பாடங்களும் கற்பித்தல் முறைகளும் எளிமையாகவும் பயனுள்ளவையாகவும் இருப்பதே கல்வியின் அடிப்படை நோக்கத்தைப் பூர்த்திசெய்யும்.
மதிப்பெண்ணுக்காகப் படிப்பதைவிடப் பல கலைகளைக் கற்கவும் உலகைத் தெரிந்துகொள்ளவும் உதவும் கல்வியே வாழ்க்கைக்கு உதவும்.
தேர்ச்சியும் தேர்ச்சி விகிதமும் கல்வித் துறையின் சாதனைக்கு வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே இருக்க முடியும். தத்தமது வகுப்புக்குரிய பாடங்களைத் தாங்களே படிக்கவும் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடிவதுதான் கல்வித்தரத்துக்கு உண்மையான உரைகல். அரசும் கல்வித் துறையும் அதை நோக்கிப் பயணிப்பது நல்லது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive