பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றவர் வழக்குரைஞராகப் பயிற்சி செய்ய தடை: உயர் நீதிமன்றம்

          பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

         பாப்பு துரை என்பவர் 1999-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி பெறாமல், அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு படித்தார்.

பிறகு 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தவறிய பிளஸ் 2 பாடத்தில் தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர்ந்து, 2013-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்றார்.

அப்போது, பாப்பு துரை பிளஸ் 2 முடிக்காமல் பட்டப்படிப்பு படித்ததாக சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஒருவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் விளக்கம் கோரி பல்கலைக்கழகம் பாப்பு துரைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பாப்பு துரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகே சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மனுதாரர் இந்த சட்ட விதிகளை பின்பற்றியிருக்கவில்லை. இதன் அடிப்படையில் மனுதாரர் வழக்குரைஞராக பயிற்சி செய்ய உரிமை கோர முடியாது.   ஆனால், ஏற்கெனவே பட்டப் படிப்பு முடித்து, பிறகு சட்டப் படிப்பு முடித்ததால் அதைப் பயனற்ற காகிதமாக்க விரும்பவில்லை. அதனால், தனியார் நிறுவனம் வேலை வழங்கினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்.

ஆனால், இதை வைத்து வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், நீதிமன்றங்களில் பயிற்சி செய்யவும் உரிமை கோர முடியாது. பல்கலைக்கழகம் அளித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive