Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாழ்க நீ எம்மான்!        பகைவரின் வணங்கிய கைகளுக்குள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிகின்ற கண்ணீரும் தீமையை மறைக்கும் பாங்காகும் என்னும் வள்ளுவர் வாக்கு, அண்ணல் காந்தியடிகளின் மரணத்தில் மெய்யாக்கப்பட்டு விட்டது.


         காரணம், அண்ணலைக் கொலை செய்ய வந்த கொடியவனின் கும்பிட்ட கைகளுக்குள் துப்பாக்கி இருந்தது என்பது மட்டுமல்ல, இன்று அக்கொலைகாரனுக்குக் கோயில் கட்டுவேன் என்று கிளம்பிய ஒரு சிலரின் கேலிக் கூத்துக்குக் கண்டனக் குரல் எழுப்புபவர்களில் பலர் காந்தியடிகளைப் பகைவராகக் கருதுபவர்கள்தான்.

எனவே, அக்கண்டனக்காரர்கள் சொரிகின்ற கண்ணீரும் அத்தன்மைத்தே ஆகும்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக எளிய மக்களாலும், நல்லோராலும் மகாத்மா என்றும், அதே சமயம், பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு குழுக்களால் வஞ்சகர் என்றும், நாணயமற்ற எதிரி என்றும், இன்னும் பல அடைமொழிகளாலும் தூற்றப்பட்டும், வசை பாடப்பட்டும் வருகிற ஒரு மனிதர் காந்தி.

மகாத்மாவின் பெயரைக் கல்வி நிறுவனங்களுக்கு வைப்பது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அவர் ஒரு சாதி வெறியர் என்றும்கூட சமீபத்தில் ஒரு கூக்குரல் எழுந்தது.

இப்படி கடந்த எழுபது ஆண்டுகளாகப் பல்வேறு விதமாகக் காந்தியடிகளை வசை பாடுவதை வாழ்வின் தலையாய கடமையாகவும், சில சமயம் தொழிலாகவும், சிலசமயம் தங்களை அறிவு ஜீவிகளாகக் காட்டிக் கொள்வதற்கான அடையாளமாகவும் வைத்துக்கொண்டுள்ள பலரும் இன்று ஒன்று சேர்ந்து கோட்úஸவுக்குக் கோயிலா என்று பொங்கி எழுந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

யார் அந்த நிலவு என்னும் திரைப்படப் பாடலில் வரும் கவியரசு கண்ணதாசனின் சில வரிகள்தான் இச்சமயத்தில் என் நினைவுக்கு வருகின்றன.

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ? ............

தெய்வமே யாருடன் மேடையில் நீ நின் றாயோ?

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண் டாயோ?

காந்தியடிகளை, அவர் வாழும்போதும், அவர் இறந்த பிறகும், தொடர்ந்து வசை பாடிய, இன்றும் வசைபாடிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்திற்கும், அண்ணலின் மெலிந்த சரீரத்தை மூன்று குண்டுகளால் வெறியடங்கச் சாய்த்த கோட்úஸவுக்கும், அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

கோட்ú ஒரேயடியாக அண்ணலைச் சாய்த்தான்; மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணலை இன்னமும் மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். கோட்ú துப்பாக்கியால் அண்ணலை வீழ்த்தினான்; மற்றவர்கள் துர்பிரசாரத்தால் வீழ்த்துகின்றனர். கோட்ú அண்ணலை ஒருநாள் கொலை செய்தான்; மற்றவர்கள் அன்றாடம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இராம பாணத்தால் உயிர் துறந்து, வீழ்ந்து கிடக்கும் இராவணனின் உடலைப் பார்த்துப் புலம்பும்போது, மண்டோதரியின் கூற்றாகக் கம்பன் இயற்றிய பாடல்:

ஆரம் போர் திருமார்பை அகல் முழைகள்

எனத்திறந்து, இவ்வுலகுக்கு அப்பால்,

தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த

சரங்களே; போரில் தோற்று,

வீரம் போய், உரம் குறைந்து, வரம்

குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன்

ஓர் அம்போ உயிர்பருகிற்று

இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ

இராமன் என்ற ஒரு மானுடனின் ஓர் அம்பால் இராவணன் வீழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பிய மண்டோதரி, இராமனது அம்பால் வீழ்வதற்கு முன்பே இராவணன் அதற்கு முன்னர் நடந்த பல நிகழ்வுகளால் வெறும் கூடாகிப் போனான் என்று நம்பினாள்.

அதேபோல் மகாத்மா காந்தியும், சனவரி 30, 1948-இல் கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு, இறுதியாக மண்ணில் சாய்வதற்கு முன்பே பல்வேறு மனிதர்களாலும், குழுக்களாலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டார் என்பதை மகாத்மா காந்தி தனது கடைசி ஆறு மாதங்களில் ஆற்றிய உரைகளாலும், எழுதிய எழுத்துகளாலும் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய ஆட்சிப் பணியில் பல்லாண்டு காலம் நல்ல முறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி. இராமமூர்த்தி, 1997 ஜூலை 15 முதல் 1998 சனவரி 30 வரை "தி இந்து' ஆங்கில நாளிதழில் தொடர் கட்டுரையாக எழுதி, பின்னர் நூல் வடிவில் வெளிவந்த "காந்திஜியின் இறுதி 200 நாள்கள்' என்னும் நூலைப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

அந்நூலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்பது, அண்ணலின் நினைவு நாளாகிய இன்று பொருத்தமாக இருக்கும்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு இன்னும் 5 நாள்களே மீதமிருந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 10-ஆம் நாள் மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டத்தில், நவகாளியில் நடந்த இனக் கலவரங்களால் மிகுந்த வேதனை அடைந்த காந்தியடிகள் பேசிய பேச்சின் ஒரு பகுதி, "நாடு விடுதலை பெற உள்ள இத்தருணத்தில் இந்த இரண்டு சமூகத்தினருமே பைத்தியம் பிடித்தவர்கள்போலச் செயல்படுகின்றனர்.

இப்போது, நான் அதிகபட்சமாக செய்யக் கூடியது - கடவுளின் கரங்களில் எனது உயிரை ஒப்படைப்பதுதான். இந்தப் பைத்தியக்காரத்தனங்களைப் பார்த்துக் கொண்டு தொடர்ந்து வாழ நான் விரும்ப மாட்டேன்'.

ஆகஸ்ட் 13-ஆம் நாள் ஹைதாரி மாளிகையில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த இளைஞர் கூட்டம் ஒன்று "காந்திஜியே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை, திரும்பிச் செல்லுங்கள்' என்று கூக்குரலிட்ட போது, அவர்களைப் பார்த்து காந்திஜி கூறினார்:

"நான் என்னை உங்கள் பாதுகாப்பில் விட்டுவிடப் போகிறேன். நீங்கள் எனக்கு எதிராகத் திரும்பலாம். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நான் என் வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் கட்டத்தை அநேகமாக எட்டி விட்டேன். நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை'.

தான் வழி நடத்திய விடுதலை வேள்வி, தான் விரும்பியடியே முழுவதுமாக அகிம்சா வழியில் செல்லவில்லை என்பதை உணர்ந்து டிசம்பர் 18, 1947-இல் அண்ணல் கூறியதாவது:

"நமது சத்தியாக்கிரகப் போராட்டம் உண்மை மற்றும் அகிம்சை வழியில் நடந்து வருவதாக நம்பி வந்தேன். அது அவ்வாறு இல்லை என்பதைக் கடவுள் எனக்கு உணர்த்தி விட்டார்..........எங்கும் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இவற்றையெல்லாம் கண்டு வரும் உங்களைப் போன்றவர்கள், என்னைப் போன்ற ஒரு முதியவன் மீது அனுதாபப்பட வேண்டும். என்னை எடுத்துச் சென்று விடுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.

நான் இப்போது ஒவ்வொருவரையும் எரிச்சல்படுத்தி வருகிறேன் என்பதை அறிவேன். நான் ஒருவன் மட்டும் சரியாகச் செயல்படுகிறேன், மற்றவர்கள் எல்லாம் தவறு இழைக்கிறார்கள் என்று நான் எப்படி நினைக்க முடியும்? ஆனால், மக்கள் என்னை ஏமாற்றுவதுதான் என்னைச் சோர்வு கொள்ளச் செய்கிறது. எனக்கு வயதாகி விட்டது.

என்னால் இனி எந்தப் பயனுமில்லை .......... இந்த உலகில் எனது நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. நான் சீக்கிரம் போய் விடுவேன். அப்போது நான் கூறியவை எல்லாம் சரி என்பதை நீங்கள் உணர்வீர்கள்'.

1947 டிசம்பர் 25-இல் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி மனம் வருந்திக் கூறியது "இந்திய நாட்டின் சுதந்திரத்தின் பயனாக நான் காண்பது என்ன?

இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஒருபுறமும் முஸ்லிம்கள் மறுபுறமும் நின்று எதிரிகளாக மோதிக் கொள்கிறார்கள். நமது விடுதலைப் போராட்டம் உண்மையிலே அகிம்சை வழியில் நடைபெற்றதாக எண்ணி நான் ஏமாந்து போனேன்.

இதனை நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளேன். கடவுள் என்னைக் குருடனாக்கி விட்டார். நான் தவறான நம்பிக்கைக்கு ஆளாக்கப்பட்டேன்......விடுதலைப் போராட்டத்தின்போது நாம் காட்டியது செயலின்மையுடன் கூடிய எதிர்ப்பே.

அதன் பொருள் யாதெனில், பிரிட்டிஷ்காரர்களை நாம் கொல்லவில்லை என்றாலும் நமது மனங்களில் அவர்களைக் கொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தோம். நாம் அவர்களைக் கொல்லாததற்குக் காரணம் அதற்கான சக்தி நம்மிடம் இல்லாமலிருந்ததே என்பதைக் குறிப்பிட வேண்டும்.

நமது மனங்களில் வன்முறை உணர்வை வைத்துக் கொண்டு நாம் வென்றெடுத்த விடுதலை உண்மையில் ஊனமான விடுதலைதான். அது முழுமையானதல்ல. சீக்கிய சகோதரர்கள் என் மீது ஆத்திரப்படும்போது எனக்கு சிரிப்பு வருகிறது.

இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைப் பொருத்தவரை எனது பார்வையில் எத்தகைய வேறுபாடும் இல்லை'.

சனவரி 3, 1948 அன்று காந்தியடிகள் பேசியது:

"இன்று நம்மைச் சுற்றியுள்ள நஞ்சு அதிகரித்து வருகிறது. காஷ்மீர் பிரச்னை இந்த நஞ்சை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு யுத்தம் ஏற்படுமானால், இரண்டு நாடுகளுமே ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்.

நான் உயிருடன் இருந்து ஒரு பார்வையாளனாக அத்தகைய படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னை எடுத்துச் சென்றுவிடு என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத்தான் முடியும். நீங்களும் இந்த பிரார்த்தனையில் இணைந்து கொள்ளுங்கள்'.

விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குத் தருவதாக ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ரூபாய் 55 கோடியைத் தரவேண்டும் என்று கோரி மகாத்மா காந்தி சனவரி 14-ஆம் நாள் முதல் உண்ணா நோன்பை மேற்கொள்கிறார்.

உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்று சி. ராஜகோபாலாச்சாரி கல்கத்தாவில் பின்வருமாறு தெரிவித்திருந்தார். "எண்ணற்ற கொடூரச் செயல்களையும் மிருகத்தனமான நடவடிக்கைகளையும் நாம் கண்டிருக்கிறோம்.

படிப்பறிவு உள்ளவர்களும் கூட உணர்வு அற்றவர்களாக மாறும்போது வாழ்வதில் பயன் இல்லை என்று காந்திஜியைப் போன்ற ஒருவர் கருதுகிறார். பயனற்றவர்களாக இருக்கும் போது எங்களைப் போன்ற வயதானவர்கள் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்பது உண்மையில் எனக்குத் தெரியவில்லை.

வயது முதிர்ந்த எங்களைப் போன்றவர்களால் சமுதாயத்தின் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று உணரும்போது இறந்து விடுவது நல்லது. மரணத்தைப் போன்ற நண்பன் வேறு எவரும் இல்லை என்று காந்திஜி கூறுவது சொல்லழகுக்காக அல்ல. அனைத்துத் துன்பங்களிலிருந்தும், வலிகளிலிருந்தும் மரணம் நம்மைக் காப்பாற்றுகிறது'.

ஆனால், காந்தியடிகள் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் சனவரி 19, 1948-இல் காந்தியடிகள் உண்ணா நோன்பை முடித்துக் கொள்கிறார். உடனே அதற்கு அடுத்த நாளே அண்ணலைக் கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது.

சனவரி 20, 1948 அன்று, பிர்லா மாளிகையின் புல்வெளியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில், ஒரு குண்டு காந்திஜியை நோக்கி வீசப்பட்டது. அது காந்திஜி பேசிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 70 அடி தொலைவில் வெடித்தது.

அது குறித்து சனவரி 24, 1948 அன்று காந்திஜி இப்படிக் கூறினார்: "20-ஆம் தேதியன்று நான் இறந்திருக்கக் கூடும். என்னிடமிருந்து வேறு வேலைகளை வாங்க விரும்பியதால் ராமன் என்னைக் காப்பாற்றினான்.

எனது உதடுகளில் சிரிப்பு தவழ நான் இறக்க முடியுமென்றால், அது பெரிய கருணைச் செயலாக இருக்கும். அத்தகைய நற்பேறுக்கு நான் தகுதி உடையவனா? அத்தகைய மரணத்துக்குத் தகுதி உடையவனாக என்னை ஆக்கிக் கொள்வது எனது முயற்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் கழியக் கழிய இந்த எனது முயற்சி மேலும் மனப்பூர்வமானதாக இருக்கும்'.

சனவரி 25, 1948 அன்று அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில் முக்கியத்துவம் மிக்க இந்த வரிகள் இடம் பெற்றிருந்தன:

"நான் ராமனின் சேவகன். அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நிறைவேற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருளுவானானால், நான் எனது வாழ்க்கை லட்சியத்தில் வெற்றி பெற்றவனாவேன்.

நான் அவற்றை மனப்பூர்வமான முறையில் பின் தொடர்ந்திருந்தால், கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்தகைய மரணத்தைக் கட்டாயம் எனக்குக் கடவுள் அருள்வான்.

யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால், அந்தக் கொலையாளியின் மீது எத்தகைய கோபமும் எனக்கு ஏற்படக் கூடாது. நான் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும். எனது இந்த விருப்பத்தை பிரார்த்தனைக் கூட்டத்தில் நான் வெளிப்படுத்தினேன்'.

சனவரி 29, 1948 வியாழக்கிழமை இரவு 9.15 மணிக்கு படுக்கைக்குச் செல்லுவதற்கு முன்னர் உருது மொழியில் அமைந்த இரு வரிப் பாடல் ஒன்றை மனு காந்தியிடம் காந்திஜி மேற்கோள் காட்டினார். அது "உலகம் என்ற தோட்டத்தில் வசந்த காலம் சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கிறது. அந்த அழகிய காட்சியைச் சிறிது நேரம் கண் திறந்து பார்த்திடுக'.

அதன் பின்னர், சனவரி 30 அண்ணல் கொலை செய்யப்படுகிறார். தான் விரும்பியபடியே பொக்கை வாயில் தவழும் புன்னகையோடும், ராம நாமத்தோடும் தன்னைக் கொன்றவன் மீது கருணை பொழியும் விழிகளோடும் அண்ணல் கீழே சாய்கிறார்.

அண்ணலின் மரணத்திற்குமுன் சில காலமாகத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, காந்திக்காக கோட்ú காத்திருந்ததைவிட, ஒரு கோட்úஸவுக்காக அல்லது தனக்கு மரணத்தைக் கொண்டுவந்து தரும் ஒரு கால தூதனுக்காக, அண்ணல் காந்தியடிகள் காத்திருந்தது தெளிவாகத் தெரிகிறது.

ஒருங்கிணைந்த இந்திய தேசம் துண்டாடப்படுவது தவிர்க்க முடியாததாகிப்போய், இனக்கலவரங்கள் முற்றிய பொழுதிலேயே காந்தியடிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டுவிட்டார். மீதமிருந்த உயிரை கோட்ú பறித்தான்.

அப்படிச் செய்ததன் மூலம், காந்தியின்மேல் எள்ளளவும் அபிமானமோ மரியாதையோ இல்லாமல், காலமெல்லாம் அவர் மேல் வெறுப்பை உமிழ்ந்து தொடர்ந்து வசை பாடியவர்களையெல்லாம் ஒரே மேடையில் ஒருங்கிணைத்த பெருமை கோட்úஸவைச் சேரும்.

மத்தேயு (26 : 52) "உன் உடைவாளை உறைக்குள் இடு, காரணம் உடைவாளை உருவுகின்றவன் உடைவாளாலேயே மடிவான்' என்று உரைக்கிறது.

ஆனால், வாழ்நாள் முழுதும் அகிம்சையையே தன் மூச்சாக, பேச்சாக, செயல்பாடாக, கோட்பாடாகக் கொண்ட மகாத்மா காந்தி, வன்முறைக்குப் பலியானது வரலாற்றின் தாளமுடியாத சோகம்.

வன்முறை கப்பிய மரணந்தான் காலகாலமாக மனிதகுலம் மகான்களுக்கும், இறைத் தூதர்களுக்கும், தன்னலமற்ற தலைவர்களுக்கும் அளித்து வந்திருக்கும் பரிசாகும்.

காந்தி கொலை செய்யப்பட்டது ஓர் அதிசய நிகழ்வு அல்ல. அவரைப்போன்ற ஒரு மகானை, நம்மைப்போன்ற ஒரு சமூகம் கிட்டத்தட்ட 79 ஆண்டுகள் வாழவிட்டதுதான் அதிசயமாகும்.

இன்று மகாத்மா காந்தி நினைவு நாள்.

    ஜனவரி 30*** மகாத்மா மறைந்த நாள்! ***தியாகிகள் தினம்*** கோட்சேவால் மகாத்மா காந்தி சுடப்பட்ட போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்

2 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கட்டுரை எழுதுயுள்ள நீதியரசர் அவர்களுக்குவாழ்த்துகள்!சிறப்பான கட்டுரை.வாழ்க நீ எம்மான்!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive