60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும்

          தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள் முழு தொகையையும் பெற முடியும். 


அரசு துறைகளிலும், பல்வேறு தனியார் துறைகளிலும் பணியாற்றுவோருக்கு, சம்பந்தப்பட்ட துறை அல்லது நிறுவனங்கள் சார்பில், பி.எப்., கணக்கு துவங்கப்படுவது வழக்கம்.


மாதந்தோறும் சம்பளத்தில்... :

ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில், அவரின் பி.எப்., கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகைக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் சார்பில் குறிப்பிட்ட தொகை வட்டியாக அளிக்கப்படும்.இந்த தொகையும், ஊழியர்களின் பி.எப்., கணக்கில் சேரும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்த தொகை அவருக்கு அளிக்கப்படுவதுடன், மாதம் தோறும் அவருக்கு ஓய்வூதியமும் அளிக்கப்படும். ஊழியர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனத்துக்கு செல்லும்போது, தங்கள் பி.எப்., கணக்கில் உள்ள தொகை முழுவதையும் திரும்ப பெறலாம் என்ற விதிமுறை இப்போது உள்ளது. இதுபோன்ற நடைமுறை யால், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஓய்வு காலத்தில் பாதிக்கப்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பதற்காக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

நடைமுறையில் மாற்றம் :

இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, பி.எப்., கமிஷனர் கே.கே.ஜலாலன் கூறியதாவது:சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகையை திரும்ப பெறுவது தொடர்பான நடைமுறையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, சந்தாதாரர்களுக்கு, 50 வயதான பின், அவர்கள் பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெற முடியும். அதற்கு முன் திரும்ப பெற வேண்டுமானால், கணக்கில் உள்ள, 90 சதவீத தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். மீதமுள்ள, 10 சதவீத தொகை, அவர்கள் கணக்கிலேயே இருக்கும். 50 வயதுக்கு பின், அந்த தொகையை பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இந்த ஆலோசனையை, தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. 'எந்த நிறுவனத்துக்கு சென்றாலும் பயன்படுத்தும் வகையில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு 'யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்' கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பி.எப்., கணக்கிலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நடவடிக்கை குறையும்' என, ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

ரூ.27,000 கோடி!


*பி.எப்., கணக்கில் உள்ள முழு தொகையையும் திரும்ப பெறுவதற்கான புதிய விதிமுறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 

*புதிய நடைமுறை அமலுக்கு வந்தாலும், மருத்துவம் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களுக்காக சந்தாதாரர்கள், பி.எப்., கணக்கிலிருந்து பணம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம் வராது என, கூறப்படுகிறது. 

*நாடு முழுவதும், பல்வேறு ஊழியர் மற்றும் தொழிலாளர்களின் பி.எப்., கணக்குகளில் உள்ள, 27,000 கோடி ரூபாய், யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது.

*இந்த தொகைக்கு உரியவர்களை கண்டறிவதற்கு பி.எப்., அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive