Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியப் பணி சுமையா? சுவையா?

       கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.


         இந்தக் கல்வி நெடுங்காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. ஆட்சியாளர்களும், ஆதிக்க வெறியர்களும் அனைவருக்கும் கல்வியளிக்க விரும்பவில்லை. கல்வியினால் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது தங்களுக்கே ஆபத்தாகும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இந்த நிலைமையிலிருந்து விடுபட்டுக் கல்வியைப் பெற அனைவருக்கும் உரிமை உண்டு என்ற நிலைமை வர இவ்வளவு காலமாகிவிட்டது. அறியாமை இருளை ஓட்டுகிற கல்வி வெளிச்சத்தை அனைவரும் பெற வேண்டியதன் அவசியத்தைக் காலம் உணர்த்தியது. எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களாகும் என்று ஆத்திசூடி, திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவுறுத்தின.
 இந்தக் கல்வியைப் போதிக்க ஆசிரியர் பணி அவசியமானது. அதனால்தான், "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. அக்காலத்து "குருகுல வாசம்' அப்படி வந்ததுதான். ஆங்கிலேயரின் வருகையால் கல்விச் சாலைகளின் புதிய அமைப்பு முறை உருவானது.
 நன்னூல் என்னும் இலக்கண நூல் ஆசிரியர்கள், மாணவர்களின் இலக்கணத்தை வகுத்துரைக்கிறது. உயர்குடிப் பிறப்பும், அருளும், இறைவழிபாடும், மேன்மையும், பல நூல்களைக் கற்ற தேர்ச்சியும், மாணவர் விரும்பும்படி கற்பிக்கும் சொல்வன்மையும், பூமி, மலை, தராசு, மலர் போன்ற பிற உயர்ந்த குணங்களும் பொருந்தியிருக்கப் பெற்றவரே நூல்களைக் கற்பிக்கும் ஆசிரியராவார் என்று கூறுகிறது.
 கல்வியே மனிதனை மனிதனாக மாற்றுகிறது என்பதால் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள். "எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்' என்பதும் இதனால்தான். அவர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அப்படி இல்லாதபோது, அதுவே ஒரு சமுதாயத்தின் சீரழிவுக்கு ஆரம்பமாகிறது.

சமுதாய முன்னேற்றத்துக்கும், கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் ஆசிரியர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள். மற்ற தொழில்கள் ஊதியத்துக்காகவே செய்யப்படுகின்றன.
 ஆசிரியப் பணி தொழில் மட்டுமல்ல, தொண்டாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான், சிறு சிறு தவறுகள் நிகழ்ந்தாலும் பெரிதாகப் பேசப்படுகிறது. வெள்ளைத் துணியில் சிறு கறை ஏற்பட்டாலும் பெரிதாகத் தெரியும் அல்லவா!
சின்னஞ்சிறு தவறுகள்கூட ஏற்படாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஆசிரியர் சமுதாயமே வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மரியாதை குறையும்போது கல்வியின் மரியாதையும் குறைந்து போகிறது.
 "கல்விச் சாலை ஒன்று திறப்பவன், சிறைச் சாலை ஒன்றை மூடுகிறான்' என்றார் அறிஞர் விக்டர் ஹியூகோ. குற்றங்களையும், குறைகளையும் போக்குகிற கல்வியைப் போதிப்பவர் குற்றவாளிகளாக இருக்கலாமா? அழுக்குகளைப் போக்கும் தண்ணீரே அழுக்காக இருந்தால் அதில் நீராடி என்ன பயன்?

"ஆசிரியப் பணியே அறப் பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்று வாழ்ந்தவர்கள் அக்காலத்து ஆசிரியர்கள் என்றும், இக்காலத்தில் ஆசிரியர்கள் ஊதியத்துக்காக மட்டும் போராடுகிறார்களேதவிர, கல்வியைப் பற்றியோ, மாணவர்கள் பற்றியோ கவலைப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆசிரியர்களும், ஆசிரியர் இயக்கங்களும் பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
காலம் மாறுகிறபோது எல்லாமே மாறுகிறது; கல்வியும் மாற வேண்டாமா? கல்வியை மாற்றியமைக்க வேண்டிய கடமை கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அரசும், கல்வித் துறையும் அவர்களுக்கு ஆவன செய்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட கல்விக் குழுக்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்படவே இல்லை.
அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆம் பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இந்தியச் சட்டங்கள் அனைவருக்கும் சமப் பாதுகாப்பு அளிக்கும் என்றும் குறிப்பிடுகிறது.
 அத்துடன் அதே அரசமைப்புச் சட்டம், 1960-ஆம் ஆண்டுக்குள் 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கும் என்றும் உறுதி செய்தது. ஆனால், 1960-க்குப் பின்னரும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறது.
 இந்நிலையில்தான், "குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009' - 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; பெற்றோரையோ, குழந்தைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ உள்படுத்தக் கூடாது.

எந்தக் குழந்தையையும் உடல்ரீதியான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது; அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி, அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்தச் சட்டத்தில் உள்ளன.
இவை இன்னும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தச் சட்டத்தையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தி அதன் பலன்கள் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மறுபடியும், மறுபடியும் எழுப்பப்படுகிறது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இங்குள்ளவர்கள் போதாதென்று வட மாநிலத்தவர்களும் இங்கே வந்து குவிகிறார்கள். இப்போது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் "குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986', குழந்தைத் தொழிலை ஒழிக்கத் தவறிவிட்டது.
 குழந்தை உழைப்பு என்பது ஒரு மிகப் பெரிய குழந்தை உரிமை மீறலாகும். இதனால், குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுவதோடு அவர்களின் குழந்தைப் பருவத்தையும், நல வாழ்வையும் அழிக்கிறது. அவர்கள் பாகுபடுத்தப்படவும், ஒதுக்கிவைக்கப்படவும் வழிவகுக்கிறது.

வறுமையின் காரணமாக மட்டுமே குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது இல்லை. மாறாக, அவர்களது உழைப்பைச் சுரண்டும் நோக்கத்தோடு அதிக லாபம் அடையவே அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
 எனவே, இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டு, 18 வயதுக்குள்பட்ட அனைவரும் ஆபத்தான, ஆபத்து இல்லாத என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில் குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
 "ஒரு அரசின் கடமை அனைவருக்கும் கல்வி அளிப்பதாகவே இருக்க வேண்டும்' என்றே பல காலமாகக் கல்வியாளர்களும், சட்ட வல்லுநர்களும், சிந்தனையாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை.
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று சொல்கிறபோது கல்வியின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டாமா? "சமச்சீர் கல்வி வேண்டும்' என்பதற்காகப் போராட்டங்கள் நடத்தி, நீதிமன்றப் படிகள் ஏறி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே வேண்டா வெறுப்பாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்பிறகும் இப்போது அரசுப் பள்ளிகள் என்றும், தனியார் பள்ளிகள் என்றும் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் இருக்கிறது. இந்நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க எப்படி முன்வருவார்கள்?
 அண்மையில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இதுபற்றி அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிபடுத்துமாறு அரசுத் தலைமைச் செயலரிடம் 2015 ஆகஸ்ட் 18-இல் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அவர்கள் சேர்த்து படிக்க வைத்தால், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இது நாடெங்கும் பேசப்படும் பேச்சாக இருக்கிறது.
 மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த 19.8.2015-இல் அனைத்து மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களைக் "கட்டாயத் தேர்ச்சி' தரும் நடைமுறையை ரத்து செய்வது பற்றி பரிசீலித்து வருவதாகவும், இதற்கு 19 மாநிலங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறு கல்வி பற்றிய பரிந்துரைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய பெருஞ்சுமை ஆசிரியர்களின் தோள்களிலேயே வைக்கப்படுகின்றன. கல்வியையும், மாணவர்களையும் நேசிக்கிற ஆசிரியர்களுக்கு இவை சுமையல்ல, சுவையேயாகும்.

கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி அவ்வாறு இல்லாமல் போனதற்குக் காரணம் அது வணிகமாகிப் போனதுதான். அதிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் கல்விக்கும் மரியாதை, அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை ஏற்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive