NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊருக்கொரு துவக்கப் பள்ளி…

           எண்ணெய் இல்லாமலும் திரி இல்லாமலும்கூட விளக்குகள் எரிந்து வெளிச்சம் கொடுக்கும் என்பதை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டார்கள். சாயங்காலத்து நிழலுக்குள் பையப் பைய மறைந்து, இருட்டில் சுத்தமாய் கண்ணுக்குத் தட்டுப்படாமல் போகும் கருணைகிரி பெருமாள் கோவில் கோபுரம். இனிஅதை மனசு குளிர ராத்திரிகூட தரிசித்து கன்னம் ஒற்றலாம். ஊர்க்காரர்களை, பரவசத்தின் உச்சிக்கு கொண்டு போயிருந்தது இது.


           இனி, சிம்னி விளக்குக் கண்ணாடிகளை உடைத்துவிடாமல் துடைக்கத் தேவையில்லை. சீமத்தண்ணியால் நிரப்பி, திரிகளை சரி செய்யத் தேவை இல்லை. கிராமத்து தாய்மார்கள், மகிழ்ச்சியோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்தியில் வெளிச்சம் அவர்களுக்குப் புதிது.இனி, இரவிலும் தெருவிளக்கில் அமர்ந்து அரிசியில் கல்லு பொறுக்கலாம் - பாண்டி பல்லாங்குழி விளையாடலாம் என்று தாய்மார்களும்; தாயம் மங்காத்தா எப்பவும் விளையாடலாம் என்று சிலரும்; இனி கவளையக் கட்டிக்கிட்டு காலையில இருந்து அந்தி வரைக்கும் முன்னயும் பின்னயுமா போய் நீர் இறைக்கத் தேவை இல்லை - பொத்தானத் தட்டினா குழாயில தண்ணியா கொட்டுமாம் என்று விவசாயிகளும்; இனி வீட்டுப் பாடத்தை ராத்திரிகூட எழுதலாம் என்பதால் மாலையில் நிறைய விளையாடலாம் என்று பள்ளிக் குழந்தைகளும் ஏகத்துக்கும் மகிழ்ந்திருந்தார்கள்.முற்றாய் முடிக்கப்பட்டிருந்த தார்ச் சாலைகள், அந்தக் கிராமத்துக் குழந்தைகளைத் திக்குமுக்காட வைத்திருந்தன.

இத்தனையையும் தங்களுக்குக் கொடுத்த அந்த மாமனிதர் அன்று அவர்களது கிராமத்துக்கு வருகிறார் என்பதை அறிந்த மக்கள், அந்தப் புண்ணியவான் முகத்தைஒருமுறை தரிசித்துவிடும் ஆவலில், தேர்முட்டித் திடலில் திரண்டிருந்தார்கள்.எல்லாவற்றையும் செய்து கொடுத்த அந்த உத்தமர், தங்களது பெருங்கனவான பள்ளிக்கூடத்தையும் கொடுத்திருந்தார் எனில் நன்றாக இருந்திருக்கும் என்று, பக்கத்து ஊருக்குப் போய் படிக்க முடியாததால் பாதிக்கப்பட்ட சில உள்ளூர் இளைஞர்களுக்கு சிறு உறுத்தல் இருந்தது. இருந்தபோதிலும் அவர்களும் மகிழ்வோடுதான் திரண்டிருந்தார்கள்.அவரும் வந்தார்.அவர்களூர் நடுத்தெரு சுப்பிரமணியக் கிழவனைப் போலவே இருந்தார். நம்மை மாதிரியே இருக்கும் இந்தக் கிழவன்தானா நமக்கு இத்தனையும் கொடுத்தார் என்றுஆச்சரியப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் என்பதால்தான், அவரால் இதை எல்லாம் செய்ய முடிந்தது என்பதையும், அவர்களில் இருந்து உருவாகும் தலைவர்களைத்தான் நம்ப வேண்டும் என்பதையும் மக்கள் இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவே இல்லை.பேச அழைத்ததும், ஒலி வாங்கியின்முன் வந்து நின்றார். பலசரக்குக் கடை அய்யாத்துரை பேசுவது மாதிரியே இருந்தது. பவுடர் பூசாத எளிமை.‘இந்த ஊருக்கு ரோடு போட்டாச்சு, லைட்டு போட்டாச்சு, ஆஸ்பத்திரி கொண்டு வந்தாச்சு. என்ன, சின்னப் பசங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்த கொண்டு வந்துட்டா நிம்மதியா தூங்குவேன். அந்தக் குறைதான் என்னை தூங்கவிடாம துரத்துது. இதை எல்லாம் செய்றதுல எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனா, பள்ளிக்கூடம் கொண்டுவரதுல நிறைய சிக்கல் இருக்கு. இதோ எங்கூடவே உங்க DEO அய்யாவ கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டுவரதுக்கு இருக்கிற சிக்கலை அய்யா சரி செஞ்சு அனுமதி கொடுத்தாங்கன்னா, உடனே உங்க ஊருக்கு பள்ளிக்கூடத்தையும் கொண்டு வந்துடலாம். அதுக்கு ஏதாச்சும் செஞ்சு ஒத்தாசை செய்ய வேணும் அய்யான்னு கேட்டுக்கறேன்’.மரியாதைக்குரிய இறையன் அய்யா அவர்கள்தான் அந்த DEO. இன்றைக்கெல்லாம், ஒரு முதல்வரிடம் இருந்து இப்படி இறைஞ்சும் தொனியிலான ஒரு வேண்டுகோளை எந்த ஒரு DEO-வும் எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு DEO-வாலும் ஒரு முதல்வரிடமிருந்தோ, கல்வித் துறை அமைச்சரிடமிருந்தோகூட அல்ல, CEO-விடமிருந்துகூட இப்படி ஒரு அணுகுமுறையை இவர்களால் எதிர்பார்க்க முடியாது.இப்போது இறையன் அவர்களின் முறை. இதுவே வரலாற்றில் எங்கும் கிடைக்காத புதியஅணுகுமுறைதான். முதல்வர் பேசி முடித்த பிறகு ஒரு அதிகாரி பேசுவது என்பதும்,அதை முதல்வர் அமர்ந்து காது கொடுத்து கேட்பதும், என் வாழ்நாளில் நான் பார்த்து அறியாதது.அவரும், முதல்வருக்கு சற்றும் குறைவுபடாத எளிமையாகவே பேசுகிறார்.‘இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேணும்னு அய்யா முடிவு செஞ்சுட்டாங்க. இனி அதைமுடிக்காம என்னை அவங்க தூங்க விடமாட்டாங்க. எனக்கும் இந்த ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் கட்ட ஆசைதாங்க அய்யா’.இதைக் கேட்டதும், முதல்வர் சிறு குழந்தைபோல மகிழ்ந்து சிரித்து கை தட்டுகிறார்.‘ஆனா, பக்கத்து ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் இருக்கு.
ஒரு பள்ளிக்கூடத்துக்கும் இன்னொரு பள்ளிக்கூடத்துக்கும் இவ்வளவு இடைவெளியாச்சும் இருக்க வேணும்னு சட்டம் இருக்கு. அதுதான் இந்த ஊருக்கு பள்ளியைக் கொண்டு வருவதில் சிக்கலா இருக்குது’.இறையன் அவர்கள் முடிப்பதற்குள் முதல்வர் எழுந்துவிட்டார்,‘அந்தச் சிக்கலை தீர்ப்பீங்கன்னுதானே உங்ககிட்ட கோரிக்கையை நம்பிக்கையோடு வைச்சிருக்கோம். அய்யா, இரக்கத்தோடு ஏதாவது செய்யுங்க. புள்ளைங்க படிக்கனும்’.‘அதத்தாங்க அய்யா சொல்ல வந்தேன்’ என்று புன்னகையுடன் தொடங்கினார் இறையன் அவர்கள். அந்த ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே ஒரு சின்ன வாய்க்கால் இருந்தது. அது மிகச் சின்ன வாய்க்கால். அதில் பாத அளவுக்கு மேல் ஒருபோதும்தண்ணீர் போனதில்லை. போக, ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையே அதை விளையாட்டா தாண்டிவிட முடியும்.
அந்த வாய்க்காலைத்தான் இயற்கைத் தடை என்பதாகக் காரணம் காட்டி வேண்டுமானால், இந்தக் கிராமத்துக்கு பள்ளிக்கூடத்தைக் கொண்டுவந்து விடலாம் என்று இறையன் அவர்கள் சொன்னதும் மகிழ்வோடு எழுந்த காமராசர், ‘அப்புறம் என்ன, இந்த ஊருக்கான பள்ளிக்கூடத்து வேலைய உடனே ஆரம்பிச்சுடலாம்னேன்’ என்று சொன்னார். அந்த ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம் வந்தது.ஏதேனும் ஓட்டை உடைசல் காரணம் கிடைக்காதா, அதைப் பயன்படுத்தி பள்ளிக்கூடம் கொண்டுவந்துவிட மாட்டோமா என்று அக்கறைப்பட்ட காலம் அது. ஏதேனும் சந்து பொந்து கிடைத்துவிடாதா, இருக்கிற பள்ளியை மூடிவிட மாட்டோமா என்று அலைகிற காலம் இது.ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை தாண்டிக் கடந்துவிடக்கூடிய ஒரு கையளவு வாய்க்காலைக் காரணம் காட்டி, அந்த வாய்க்காலைத் தாண்டி பள்ளிக்குப் போகும்போது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்லி, இந்தப் பக்கமே ஒரு பள்ளியைக் கொண்டு வந்த தமிழ்நாட்டில்தான், கீழ்க்காணும் செய்தியும் பல்லை இளித்துக்கொண்டு எகத்தாளமாய்ச் சிரிக்கிறது.2015, ஜூலை மாதத்தில் ஒருநாள், ஒரு பத்திரிகையில் வந்த அந்தச் செய்தி இதுதான்,வேதாரண்யத்துக்கு அருகே உள்ள ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குத்தான் குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். இரண்டு ஊர்களுக்கும் இடையே ஒரு ஆறோ வாய்க்காலோ ஓடுகிறது. தாண்டியெல்லாம் அதனை கடக்க இயலாதபடி அகலமானது அது. கரையும் உயரமானது.
எனவே, பனைமரங்களால் ஆன ஒரு பாலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். பாலம் என்றால் வேறேதோ கனவுக்குள் எல்லாம் நுழைந்து பறக்கத் தொடங்கிவிடக்கூடாது. ஒரு ஆறேழு பனைமரங்களை பக்கம் பக்கமாக அடுக்கிவைத்து பாலம் மாதிரி செய்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.அதில் மிதிவண்டிகளைத் தள்ளிக்கொண்டும், நடந்துமாக குழந்தைகள் கடப்பது மிக ஆபத்தானதாக உள்ளது. வழுக்கிவிடும். பிடிமானங்கள் ஏதும் இல்லாததால், தவறியும் விழுந்திருக்கிறார்கள் குழந்தைகள் அப்படித் தவறி விழுந்த சில குழந்தைகள், தண்ணீரில் அடித்தும் செல்லப்பட்டிருக்கிறார்கள்.இவை எல்லாம் போதாதென்னும், இருக்கிற அந்தப் பாலமும் வயதாகி, உளுத்து நாளுக்கு நாள் சிதைந்துகொண்டே போகிறது.எனவே, பள்ளி தொடங்கும் நேரத்துக்கும் முடியும் நேரத்துக்கும் வாய்க்காலின் இரு கரைகளிலும் அந்தந்த ஊர் மக்கள் திரண்டு நின்று, வாய்க்காலை குழந்தைகள் பத்திரமாகக் கடப்பதை உறுதி செய்த பின்னரே நகர்கின்றனர். தப்பித் தவறி குழந்தைகள் வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டால், குதித்துக் காப்பாற்றுவதற்காகவே இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவ்வாறாகஅவர்கள் குதித்துக் காப்பாற்ற வேண்டிய சூழல்களும் கடந்த காலத்தில் வாய்த்திருக்கின்றன.
பள்ளிக்குப் போகும்போதோ வரும்போதோ வாய்க்காலில் விழுந்து குழந்தைகள் இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த ஊர் மக்களைப் பொறுத்தவரை, கல்வி மிகவும் ஆபத்தானது. அவர்களால் முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.இந்த ஆபத்துக்குப் பயந்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்களும் அந்த ஊரில் இருக்கவே கூடும். அவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் உயிர் என்பது, குழந்தைகளின் கல்வியைவிட முக்கியமானது. ஆக, பல குழந்தைகளையும் பல குழந்தைகளது கல்வியையும் இந்த வாய்க்கால் காவு வாங்கியிருக்கிறது.இந்த ஒரு பாலத்தை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதே வாய்க்காலில், இதே நிலையில் இன்னும் எத்தனை பாலங்களோ? மேலும், இத்தகைய பாலங்களும் இல்லாத நிலையில், எத்தனைக் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் இருக்கிறார்களோ?இதேபோன்று எத்தனை வாய்க்கால்கள் இந்தப் பகுதியில் உள்ளனவோ? நாடு முழுவதும் இதுபோன்று கடந்து செல்வதற்கு பால வசதியற்ற வாய்க்கால்கள் எத்தனையோ?அன்றைய செய்தித்தாள், அந்தப் பகுதி மக்களிடம் சிறிய அளவில் ஒரு நேர்காணலை நிகழ்த்தியுள்ளது. அனைவரிடமும் தனித்தனியாக, ‘அரசிடம் நீங்கள் வைக்கக்கூடியகோரிக்கை என்ன?’ என்ற ஒரே ஒரே கேள்வியைத்தான் வைத்துள்ளது.
பல பத்து ஆண்டுகளாக தங்களது கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வதற்காக, தங்களது அனைத்துவிதமான முயற்சிகளும் போராட்டங்களும் தோற்றுப்போய் சோர்வுற்ற நிலையில் இருந்தாலும், இந்த நேர்காணல் தங்களது நியாயமான கோரிக்கையை அரசிடம் கொண்டுபோய் சேர்த்துவிடாதா, தங்களுக்கும் விடிந்துவிடாதா என்ற ஒருவித நம்பிக்கையோடு அந்த மக்கள் ஒரே குரலில் சொல்லியிருக்கிறார்கள்,‘எங்களுக்கு ஒரு சிமெண்டுப் பாலம் வேண்டும்’அவர்கள் கோரிக்கைக்காக நாமும் குரல் கொடுக்கவே செய்கிறோம். அவர்கள் ஊரில் இருக்கும் அந்த அரதப் பழைய மரப்பாலத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு சிமெண்டு பாலத்தை அரசு கட்டித் தரட்டும்.அந்தப் பாலத்தின் மூலம், அந்த இரண்டு ஊர் மக்களும் கூடி வாழ, இரண்டு ஊர்க் குழந்தைகளும் கூடி விளையாட வாய்ப்புகள் பெருகட்டும். வணிகம் பெருகி செழிக்கட்டும்.ஆனால், பிள்ளைகள் பள்ளிக்குப் போய் வருவதற்கு மட்டும் அந்தப் பாலத்தின் தேவை இல்லாமல் போகட்டும்.தெருதோறும் தெருதோறுமான தமிழ்ப் பள்ளிகளை மகாகவி கனவு கண்டான்.ஊருக்கு ஒரு அரசுப் பள்ளியேனும் கனவு காண்போம்; அதற்கு உழைப்போம்; வென்றெடுப்போம்.
நன்றி - தினமணிகட்டுரையாளர் திரு.இரா. எட்வின்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive