பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மின்தேவை அதிகரிக்கும் என்பதால்
தடையின்றி மின்சாரம் விநியோகிக்க பொறியாளர்களை மின்சார வாரியம்
அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:
ஜூன் 1 -ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால்
மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மின் விநியோக பணியில் கவனமாக
இருக்கும்படி பொறியாளர்களை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி,
மின் கொள்முதல் இருக்கிறது. எனினும் மின்சாதனங்கள் பழுது காரணமாக ஆங்காங்கே
அவ்வபோது மின்தடை ஏற்பட்டு வருகிறது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்து தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம்
மெகாவாட் என்ற அளவில் இருந்தது. இதில் அதிகபட்சமாக, கடந்த ஏப்ரல் 27 -ஆம்
தேதி மின்தேவை 15,440 மெகாவாட்டாக உயர்ந்தது.
இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் மின் தேவை 14 ஆயிரம்
மெகாவாட்டுக்கும் கீழே உள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மின் தேவை மீண்டும் அதிகரிக்க
வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையின்றி மின்சாரத்தை
விநியோகம் செய்ய ஏதுவாக மின்வாரிய உயரதிகாரிகள் தலைமை பொறியாளர்கள், செயற்
பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் மின் விநியோகத்தில் கவனமாக
இருக்கவும், மின் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காரணமான
பொறியாளர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...