ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு!

திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப கல்லூரி
ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ). இந்த அமைப்பு ஆசிரியர்கள்- மாணவர்கள் தொடர்பான விகிதாசாரங்களை சமீபத்தில் மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டது. 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்த விதியை மாற்றி, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அமைத்து உத்தரவு வெளியிட்டது. இந்நிலையில் ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்வதை ஏஐசிடிஇ ஒருபோதும் அனுமதிக்காது. ஏஐசிடிஇயின் கீழ் அங்கீகாரம் பெற்ற எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக ஆசிரியர்கள் ஓய்வு பெறுதல் அல்லது சுயவிருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்தால் மட்டுமே விகிதாசாரத்தை ஈடு செய்ய வேண்டும்.
வேறு எந்த வகையிலும் ஆட்குறைப்பு செய்து இந்த விகிதாச்சாரத்தை ஈடு செய்யக்கூடாது. ஏஐசிடிஇ அங்கீகரித்த எந்த கல்வி நிறுவனமும் திருத்தியமைக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் காரணமாக ஆசிரியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை இல்லை என்பதை மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஏஐசிடிஇ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this