வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள
மாநில மக்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கேரள வெள்ள பாதிப்புக்கு சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 4 கண்டெய்னர்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய ரூ.1 கோடி நிதி காசோலையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரள மாநிலத்துக்கான நிவாரணப் பொருள்கள் விரைவில் மாவட்டந்தோறும் பெறப்பட்டு அனுப்பப்படும்.
மாதிரிப் பள்ளி: தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரிப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அதில் எல்.கே ஜி., யூ.கே ஜி. வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் 412 மையங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதற்காக தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...