விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்

ஆக.31: தேசிய விளையாட்டு
தினத்தையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 208 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை வழங்கிய இளைஞர் நலத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தடகளம், நீச்சல், கால்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார். அசோக்குமார் எம்பி., எம்எல்ஏ.க்கள் மனோரஞ்சிதம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற 208 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நிதியாண்டில் விளையாட்டு துறைக்கென ₹200 கோடி வழங்கியுள்ளார். அதே போல் தமிழகத்தின் சார்பாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 152 வீரர்களுக்கு ₹17 கோடியே 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இந்த ஆண்டு நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சார்பில் 30 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் பதக்கங்களை பெற்று தமிழத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கு ₹2 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். 
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் படிப்பதோடு, உடல் நலம் மற்றும் மன நலம் ஆகியவை வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை மேலாளர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், கல்லூரி துணை முதல்வர் கீதா மற்றும் விளையாட்டு பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தேக்வாண்டோ பயிற்றுநர் ராஜகோபால் நன்றி கூறினார்.

Share this