குழந்தைகளை கவரும் 'ரோபோ ஆசிரியர்' :-கற்றலில் புதுமை!


குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சீனா, மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது.

சமீபத்திய சில ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங் களுக்கு அதிகளவு நிதியை சீனா செலவு செய்கிறது. இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களையும் அதிகளவில் நியமித்துள்ளது. பல்வேறு துறைகளிலும் ரோபோக்களை சீனா அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக ரோபோ மாநாடும் பீஜிங்கில் நடந்தது.


இந்த வரிசையில் தற்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்கு, ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 'கீகோ' என பெயரிடப்பட்டுள்ளது. 2008ல் வெளியான 'வால் - இ' என்ற அமெரிக்க கம்ப்யூட்டர் அனிமேஷன் திரைப்படத்தில் வரும் கரடி போன்று, இதன் உருவமைப்பு உள்ளது.


இதன் உயரம் இரண்டு அடி. கைகள் இல்லை. இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் நேவிகேஷன் சென்சார் மூலம் தானாகவே நகரும். இதற்காக சிறிய சக்கரம் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பதில் அளிப்பதற்கு, முகத்துக்கு பதிலாக சிறிய ஸ்கீரின் உள்ளது. இதில் கண்கள் 'இதயம்' வடிவில் உள்ளது. குழந்தைகளுடன் உரையாடும் இந்த ரோபோ, கதைகள் மற்றும் லாஜிக்கல் கணக்குகளையும் சொல்லி தருகிறது. முதற்கட்டமாக சீனாவில் சோதனை முறையில் 600 மழலையர் (எல்.கே.ஜி. யு.கே.ஜி., ) பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் விலை ரூ. 1 லட்சம்.
ஒருவழிப்பாதை

இதுகுறித்து 'கீகோ' ரோபோவை இயக்கும் பயற்சி பெற்ற ஆசிரியர் கேண்டி ஜியாங் கூறுகையில், ''இன்றைய கல்விமுறை சவாலான ஒன்றாக மாறிவிட்டது. எனவே கல்வி என்பது நீண்ட நாட்கள் ஒருவழிப்பாதையாக இருக்க முடியாது. எப்போதுமே ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சூழல் இருப்பது ஆரோக்கியமானதல்ல. மாணவர்கள் பல வழிகளிலும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த புதிய முறையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளை 'கீகோ' மிகவும் கவர்கிறது. இதனிடம் உரையாடுவதற்கு குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர்'' என்றார்.


இதுகுறித்து ஒரு சீன பள்ளி முதல்வர் கூறுகையில், '' கல்வி என்பது பார்வை, வெளிப்பாடு, தொடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. வெறும் வாய்மொழியாக மட்டும் இருக்கக்கூடாது. ரோபோ என்பது மனிதர்களை விட எப்பபோதும் நிலையாக இருக்கும்'' என்றார். ஒருபுறம் கல்வியாளர்கள் இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் நிலையில், எந்த வகையில் ஆசிரியருக்கு நிகராக கம்ப்யூட்டர் இருக்காது என எதிர்ப்பும் நிலவுகிறது.

3.40 லட்சம்

சர்வதேச ரோபோட்ஸ் கூட்டமைப்பின் தகவலின் படி, சீனாவில் 3.40 லட்சம் ரோபோ வடிவமைக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

Share this