தமிழகத்தில் மாவட்டத்திற்கு
ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.
மேலும் மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது.
அந்த மாதிரி பள்ளிகளில் ஒன்றாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவாகி உள்ளது. இந்த பள்ளியில் தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம், சி.சி.டி.வி. கேமரா, தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை உள்ளன. அங்கு மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாதிரி பள்ளியை தொடங்கிவைத்து பேசியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 2, 7, 10, 12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.
மேலும் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கும், இப்போது 12-வது வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்கப்படும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபோதனை வகுப்பு அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி
அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் மற்றும் ஆங்கில வழி கல்வி அடுத்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும். இதற்காக சமூக நலத்துறையுடன் எப்படி தொடங்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பார். எல்.கே.ஜி., யு.கே.ஜி. முடித்தபிறகு அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்த மாணவர்கள் சேர்வார்கள். எனவே அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிகல்வி தொடங்கப்படும். 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரையிலும், 6 முதல் 8 வகுப்பு வரையிலும் அடுத்த கல்வி ஆண்டில் சீருடைகள் மாற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிறகு அவர், பள்ளிக்கு நிதி உதவி செய்தவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
ஐகோர்ட்டு நீதிபதியும், பள்ளியின் முன்னாள் மாணவியுமான பவானி சுப்பராயன், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி உள்பட பலர் பேசினார்கள்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், இணை இயக்குனர் நரேஷ், முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...